“தமிழகத்தில் செயற்கை மழை திட்டம் குறித்து ஆய்வு நடக்கிறது” -அமைச்சர் வேலுமணி பேட்டி


“தமிழகத்தில் செயற்கை மழை திட்டம் குறித்து ஆய்வு நடக்கிறது” -அமைச்சர் வேலுமணி பேட்டி
x
தினத்தந்தி 27 Jun 2019 4:30 AM IST (Updated: 27 Jun 2019 4:28 AM IST)
t-max-icont-min-icon

“தமிழகத்தில் செயற்கை மழை பெய்ய வைக்கும் திட்டம் தொடர்பாக ஆய்வு நடந்து வருகிறது“ என உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி கூறினார்.

தூத்துக்குடி,

நெல்லை மாவட்டத்தில் நடந்த குடிநீர் பிரச்சினை தொடர்பான ஆய்வு கூட்டத்தில் பங்கேற்பதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். இதையடுத்து அமைச்சர் வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

நெல்லையில் 5 மாவட்ட அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடக்கிறது. இதில் குடிநீர் திட்டம், பசுமை வீடுகள், பாரத பிரதமரின் குடியிருப்பு திட்டத்தில் கட்டப்படும் வீடுகள், சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. மத்திய அரசின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் புதிதாக சேர்க்கப்பட உள்ளனர். இதனால் 7 லட்சம் பேர் வரை கூடுதலாக சேர்க்கப்பட உள்ளனர்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு குடிநீர் பிரச்சினை தீர்க்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடியில் முதல்-அமைச்சர் 4-வது குடிநீர் குழாய் திட்டத்தை தொடங்கி வைத்தார். இதனால் தூத்துக்குடியில் குடிநீர் பிரச்சினை பெரிதாக இல்லை.

மழை பெய்யாததால் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. ஊரக வளர்ச்சித்துறை மூலம் ரூ.430 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பஞ்சாயத்துகள், பேரூராட்சிகளில் சீராக குடிநீர் வழங்குவதற்காக பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

செயற்கை மழை திட்டம் தொடர்பாக ஏற்கனவே ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இந்த திட்டம் பல இடங்களில் தோல்வி அடைந்து உள்ளது. இதற்கு முன்பு செயல்படுத்தியபோது எதிர்பார்த்த அளவுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. மேகம் இருக்கும் இடத்தில் ஏரி, குளம் இருந்தால்தான் தண்ணீரை சேமிக்க முடியும். இருந்தாலும் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்.

நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. நீர்நிலை ஆக்கிரமிப்பில் இருப்பவர்களுக்கு மாற்று இடம் கொடுக்கப்பட்ட பிறகு அந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு உள்ளன. அதன்படி தமிழகத்தில் 10 ஆயிரத்து 600 வீடுகள் அகற்றப்பட்டு உள்ளன. ஜோலார்பேட்டையி இருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்லும் பணி ஓரிரு வாரங்களுக்குள் முடிக்கப்படும். உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான வேலைகள் நடந்து வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story