குழந்தை இல்லாத ஏக்கத்தில் தனியார் நிறுவன மேலாளர் தற்கொலை; வேறு திருமணம் செய்யுமாறு மனைவிக்கு அறிவுரை
திருமுல்லைவாயல் அருகே தனியார் நிறுவன மேலாளர் ஒருவர் குழந்தை இல்லாத ஏக்கத்தில் தற்கொலை செய்து கொண்டார். தனது மரணத்துக்குப்பின் வேறு திருமணம் செய்து கொள்ளுமாறு மனைவிக்கு அவர் செல்போன் வீடியோ மூலம் அறிவுறுத்தி இருப்பது பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆவடி,
திருமுல்லைவாயலை அடுத்த அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்தவர் ராஜ் (வயது 33). இவர், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஒரு ஐ.டி. கம்பெனியில் மேலாளராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி மோகனப்பிரியா (31). என்ஜினீயரான இவர், தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.
இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகியும் குழந்தைகள் இல்லை. கடந்த 6 மாதங்களுக்கு முன் மோகனப்பிரியா கர்ப்பமடைந்தார். எனினும் சில நாட்களில் அந்த கரு கலைந்து விட்டது. இதனால் தம்பதியினர் இருவரும் பெரும் சோகத்தில் இருந்தனர்.
திருமணம் ஆகி ஆண்டுகள் சில கடந்த பின்னும் தங்களுக்கு குழந்தை இல்லாததால் மனம் உடைந்த ராஜ், நேற்று காலையில் வீட்டில் தனது மனைவி இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியில் சென்று இருந்த மோகனப்பிரியா வீட்டுக்கு வந்தபோது தனது கணவர் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு கதறி அழுதார்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த திருமுல்லைவாயல் போலீசார் ராஜின் உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து விசாரணை நடத்தினர்.
அப்போது தற்கொலைக்கு முன்னதாக ராஜ் தனது செல்போனில் மனைவிக்காக ஒரு வீடியோவை பதிவு செய்து உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் அவர், ‘‘உன்னை நான் ரொம்ப லவ் பண்றேன், உன்னை மிஸ் பண்றேன். மோகனா எனக்கு வாழவே பிடிக்கவில்லை. என்னால் நீ ரொம்ப கஷ்டப்படுற. நீ தற்கொலை செய்து கொள்ளாதே. தயவுசெய்து நீ வேற கல்யாணம் பண்ணிக்கோ. உனக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கணும். நீ குழந்தையை பெற்று நல்லா வாழணும். உன்னை நெனைச்சா ரொம்ப கஷ்டமா இருக்கு’’ என கூறி இருந்தார்.
இதைப்பார்த்து அவரது மனைவி மற்றும் உறவினர்கள் கதறியது பரிதாபமாக இருந்தது.