மலைப்பிரதேச மாணவ-மாணவிகளுக்கு பயன்படாத விலையில்லா சைக்கிள்கள் - மாற்று நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை
மலைப்பிரதேச மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படும் விலையில்லா சைக் கிள்கள் பயன்படாமல் போகின்றன. எனவே மாற்று நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
கூடலூர்,
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மட்டுமின்றி தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகளின் கல்வி திறனை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா கிராமப்புற ஏழை பெண் குழந்தைகள் நீண்ட தொலைவில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு சென்று வர விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் திட்டத்தை பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி வைத்தார்.
இதனால் ஏழை மாணவிகள் மிகுந்த பயன் அடைந்து வருகின்றனர். நாளடைவில் படிப்படியாக திட்டம் விரிவுபடுத்தப்பட்டு 11 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள், மடிக்கணினி என கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது. சமவெளி பகுதியில் வசிக்கும் மாணவ-மாணவிகள் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை இன்று வரை பயன்படுத்தி வருகின்றனர். இதே திட்டத்தின் கீழ் நீலகிரி, கொடைக்கானல் உள்ளிட்ட மலைப்பிரதேச பகுதியில் வாழும் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் ஆயிரக்கணக்கில் வழங்கப்பட்டு உள்ளது.
ஆனால் மேடு, பள்ளங்கள் நிறைந்த மலைப்பகுதி என்பதால் மாணவ-மாணவிகள் விலையில்லா சைக்கிள்களை ஓட்ட முடிவது இல்லை. மேலும் மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள்கள் வழங்கும்போது, முறையாக உபகரணங்களை பொருத்தி வழங்குவது இல்லை என்ற புகாரும் பெற்றோர் தரப்பில் கூறப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் விலையில்லா சைக்கிள்களால் மாணவ-மாணவிகளுக்கு எந்த பயனும் இல்லாமல் வீட்டுக்குள் முடங்கி கிடக்கிறது. பெரும்பாலானவர்கள் இடவசதி இல்லாத காரணத்தால் இரும்பு கடைகளுக்கு விலையில்லா சைக்கிள்களை அனுப்பி விடுகின்றனர். இதனால் அரசின் பணம் வீணடிக்கப்படுகிறது.
தமிழக அரசு மூலம் தகுதி உள்ள பொதுமக்களுக்கு மிக்சி, கிரைண்டர், மின்விசிறி உள்ளிட்ட பொருட்கள் கடந்த காலங்களில் வழங்கப்பட்டது. இதில் மலைப்பிரதேசங்களில் வசிக்கும் மக்களுக்கு மின்விசிறிக்கு பதிலாக மின் அடுப்புகள் வழங்கப்பட்டது. இப்பொருட்களை இன்று வரை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
கூடலூர் பகுதியில் உள்ள இரும்பு கடைகளில் விலையில்லா சைக்கிள்கள் உடைக்கப்பட்டு பழைய இரும்பு கடைகளில் வைக்கப்பட்டுள்ளது. இதே நிலை நீலகிரி மாவட்டம் முழுவதும் காணப்படுகிறது. எனவே அரசின் பணம் வீணாகாமல் இருக்க சம்பந்தப்பட்ட கல்வித்துறையின் உயரதிகாரிகள் மாநில அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று மலைப்பிரதேச மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் விலையில்லா சைக்கிள்களுக்கு பதிலாக மாற்று நடவடிக்கையாக பயனுள்ள வேறு உபகரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து கூடலூர் சமூக ஆர்வலர் கே.ஜே.ஆன்டணி கூறியதாவது:-
விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டம் சமவெளி மாணவ- மாணவிகளுக்கு பயன் உள்ளதாக உள்ளது.
இத்திட்டம் வரவேற்கக்கூடியது. ஆனால் மலைப்பிரதேசங்களில் விலையில்லா சைக்கிள் களை மாணவ- மாணவிகள் பயன்படுத்துவது கிடையாது. மேடு, பள்ளங்கள் நிறைந்த சாலைகளில் சைக்கிள்கள் ஓட்ட முடியாது. இதனால் பாதுகாப்பு கருதி சைக்கிள்களை பயன்படுத்த பெற்றோர் மாணவ-மாணவிகளை அனுமதிப்பது இல்லை. இதனால் வழங்கிய சில மாதங்களில் விலையில்லா சைக்கிள்கள் இரும்பு கடைகளுக்கு வந்து விடுகிறது. எனவே மலைப்பிரதேசத்தில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களுக்கு பதிலாக வேறு திட்டத்தை கொண்டு வர வேண்டும். பல ஆண்டுகளாக இதே நிலைமை நீடித்து வருகிறது. இதை அதிகாரிகள் கருத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
ஓவேலியை சேர்ந்த விவசாயி சுப்பிரமணி கூறியதாவது:-
நீலகிரி மாணவ- மாணவிகள் சைக்கிள் களை பயன்படுத்துவது இல்லை. இங்கு சைக்கிள்கள் ஓட்டக்கூடிய வகையில் சாலை வசதியும் இல்லை. ஆபத்தான பள்ளத்தாக்குகள், மேடுகள் உள்ளதால் தமிழக அரசு வழங்கும் விலையில்லா சைக்கிள்களை மாணவ-மாணவிகளால் இயக்க முடியவில்லை. இதனால் அவை பயனின்றி பழைய இரும்பு கடைகளுக்கு செல்லும் அவலம் தொடர்கிறது. விலையில்லா சைக்கிள்களுக்கு ஒதுக்கப்படும் அரசு நிதி வீணாகி வருகிறது.
இதற்கு பதிலாக வேறு உபகரணங்களை மாணவர்களுக்கு வழங்க அரசு ஆலோசிக்க வேண்டும். இல்லை எனில் சைக்கிள்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை கொண்டு அரசு பள்ளிக்கூடங்களில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தினால் நன்றாக இருக்கும். எனவே உயரதிகாரிகள் அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story