வீடுகளை சேதப்படுத்திய காட்டுயானைகள்-சேரம்பாடி வனச்சரக அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
வீடுகளை காட்டுயானைகள் சேதப்படுத்தியதால் புதிய வீடுகள் கட்டி தரக்கோரி சேரம்பாடி வனச்சரக அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
பந்தலூர்,
பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட கொளப்பள்ளி அருகே கருத்தாடு பகுதியில் நேற்று முன்தினம் இரவு 16 காட்டு யானைகள் புகுந்தது. பின்னர் அங்கு பயிரிட்டு இருந்த வாழை, தென்னை, பாக்கு பயிர்களை தின்று சேதப்படுத்தியது. தொடர்ந்து பொதுமக்களின் வீடுகளை முற்றுகையிட்டது. இதனால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்தனர். அப்போது சாந்தி (வயது 33) என்பவர் தனது 5 குழந்தைகளுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். இந்த சமயத்தில் வீட்டின் அருகே நின்றிருந்த மரத்தை காட்டு யானைகள் முறிக்கும் சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த சாந்தி மற்றும் அவரது குழந்தைகள் பயத்தில் கூச்சலிட்டனர். மேலும் பின்பக்க வாசல் வழியாக குழந்தைகளை அழைத்து கொண்டு சாந்தி வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் தனது சகோதரி வீட்டில் குழந்தைகளுடன் அவர் தஞ்சம் அடைந்தார்.
இதனால் காட்டு யானைகளிடம் சிக்காமல் அனைவரும் உயிர் தப்பினர். இதனிடையே சாந்தியின் வீட்டை காட்டு யானைகள் இடித்து சேதப்படுத்தின. மேலும் அங்கு வைக்கப்பட்டு இருந்த அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களை தின்றன. பின்னர் விடியற்காலை வரை அப்பகுதியில் நின்றிருந்த காட்டுயானைகள் அங்கிருந்து சென்றன. இதுகுறித்து தகவல் அறிந்த பிதிர்காடு வனச்சரகர் மனோகரன், வன காப்பாளர் ராஜேஷ்குமார், வன காவலர் குணசேகரன், கிராம நிர்வாக அலுவலா நந்தகோபால், உதவியாளர் ராஜேந்திரன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
இதேபோல் சேரம்பாடியில் இருந்து கண்ணம்பள்ளி செல்லும் சாலையோரத்தில் சந்தனமாகுன்னு ஆதிவாசி காலனியில் பொம்மி என்பவரின் குடிசை வீட்டை காட்டு யானைகள் சேதப்படுத்தின. இதுகுறித்து தகவல் அறிந்த சேரம்பாடி வனச்சரகர் சின்னதம்பி தலைமையிலான வனத்துறையினர் விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் இதுவரை காட்டுயானைகள் சேதப்படுத்திய வீடுகளுக்கு பதிலாக புதிய தொகுப்பு வீடுகள் கட்டி தர வேண்டும் என்று அப்பகுதி ஆதிவாசி மக்கள் சேரம்பாடி வனச்சரக அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடைந்த ஆதிவாசி மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story