பூண்டி அருகே உள்ள விவசாய கிணறுகளில் இருந்து சென்னைக்கு தண்ணீர் வினியோகம்
பூண்டி அருகே உள்ள விவசாய கிணறுகளில் இருந்து சென்னைக்கு தண்ணீர் வினியோகம் செய்யும் பணி தொடங்கி உள்ளது.
ஊத்துக்கோட்டை,
சென்னைக்கு குடிநீர் வினியோகம் செய்யும் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகள் முற்றிலுமாக வறண்டு விட்டன. இதனால் சென்னையில் குடிநீர் பிரச்சினை அதிகரித்துள்ளது. இந்த பிரச்சினையை தீர்க்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர். வீராணம் ஏரி, கல்குவாரிகளில் இருந்து பெறப்படும் தண்ணீரை வினியோகித்து வருகின்றனர்.
கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று தமிழக அரசு ஆந்திர அரசை கேட்டு கொண்டது. 68 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட கண்டலேறு அணையில் தற்போது வெறும் 4.50 டி.எம்.சி. தண்ணீர் மட்டும் இருப்பு உள்ளதால் பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்க சாத்தியம் இல்லை என்று ஆந்திர அரசு திட்டவட்டமாக கூறிவிட்டது.
மழை பெய்தால் மட்டுமே பூண்டி ஏரிக்கு தண்ணீர் வரும் என்ற நிலைமை உள்ளது. இந்த நிலையில் பூண்டி அருகே உள்ள மோவூர், காந்திநகர், புல்லரம்பாக்கம், சிறவானூர்கண்டிகை போன்ற பகுதிகளில் உள்ள விவசாய கிணறுகளில் இருந்து நாள் ஒன்றுக்கு 50 முதல் 60 மில்லியன் லிட்டர் வரை தண்ணீர் பெற்று சென்னைக்கு அனுப்பி வைக்கும் பணிகள் நேற்று முன்தினம் இரவு தொடங்கப்பட்டது.
விவசாய கிணறுகளில் இருந்து பெறப்படும் தண்ணீர் செங்குன்றத்தில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்துக்கு அனுப்பப்படுகிறது. விவசாய கிணற்று தண்ணீர் கிடைத்து கொண்டிருப்பதால் சென்னையில் ஓரளவு குடிநீர் பிரச்சினை தீரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.