சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு; கந்துவட்டி கொடுமையால் ஓட்டல் அதிபர் தீக்குளிக்க முயற்சி


சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு; கந்துவட்டி கொடுமையால் ஓட்டல் அதிபர் தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 27 Jun 2019 5:00 AM IST (Updated: 27 Jun 2019 4:40 AM IST)
t-max-icont-min-icon

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கந்துவட்டி கொடுமையால் ஓட்டல் அதிபர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர்.

சென்னை,

சென்னை ராயப்பேட்டையை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 56). இவர் சென்னை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் ஓட்டல் நடத்தி வந்தார். நேற்று காலை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு தங்கராஜ் வந்தார்.

அலுவலகத்தின் முன்பு நின்றுகொண்டிருந்த அவர், திடீரென தனது தலையில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கு காவலுக்கு நின்ற போலீசார் அவரை தீக்குளிக்க விடாமல் காப்பாற்றினார்கள். அவரது தலையில் தண்ணீர் ஊற்றப்பட்டது.

தீக்குளிக்க முயன்றது ஏன்? என்பது குறித்து போலீஸ் விசாரணையில் தங்கராஜ் கூறியதாவது:-

நான் வங்கியில் கடன் வாங்கி ரூ.2 கோடி முதலீட்டில் நுங்கம்பாக்கத்தில் ஓட்டல் நடத்தி வந்தேன். இந்தநிலையில் அவசரத்தேவைக்காக கோடம்பாக்கத்தை சேர்ந்த கந்துவட்டி பிரமுகர் ஒருவரிடம் ரூ.3 லட்சம் கடன் வாங்கினேன்.

அந்த கடனை திருப்பி கொடுக்க முடியவில்லை. இதனால் அந்த கந்துவட்டி பிரமுகர் என்னை மிரட்டி வந்தார். திடீரென்று அவர் அடியாட்களோடு வந்து ரூ.1½ கோடி மதிப்புள்ள ஓட்டலில் உள்ள பொருட்களை அள்ளிச் சென்றுவிட்டார்.

மேலும் ஓட்டலை பூட்டி சாவியையும் எடுத்துச் சென்றுவிட்டார். இதுகுறித்து புகார் கொடுத்தபோது, நுங்கம்பாக்கம் போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் தான் நியாயம் கேட்டு கமிஷனர் அலுவலகம் வந்து தீக்குளிக்க முயற்சித்தேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வேப்பேரி போலீசார் அவரை விசாரணைக்காக அழைத்து சென்றனர். அவர் சொன்ன புகார் மீது விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

Next Story