வண்ணாரப்பேட்டையில் நகைக்கடையில் திருடிய 2 பெண்கள் கைது; கண்காணிப்பு கேமரா காட்சியால் சிக்கினர்


வண்ணாரப்பேட்டையில் நகைக்கடையில் திருடிய 2 பெண்கள் கைது; கண்காணிப்பு கேமரா காட்சியால் சிக்கினர்
x
தினத்தந்தி 27 Jun 2019 4:45 AM IST (Updated: 27 Jun 2019 4:40 AM IST)
t-max-icont-min-icon

வண்ணாரப்பேட்டையில் நகை வாங்குவது போல நடித்து கடையில் இருந்து நகைகளை திருடிய 2 பெண்களை கண்காணிப்பு கேமரா காட்சி உதவியால் போலீசார் கைது செய்தனர்.

பெரம்பூர்,

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் தருண்குமார் என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார். கடந்த 19-ந் தேதி மாலை கடையில் தருண்குமாரின் தந்தை மிசிற்லால் மட்டும் இருந்தார். அப்போது கடைக்கு வந்த 2 பெண்கள் நகை வாங்க வந்திருப்பதாக தெரிவித்தனர்.

அவர்களுக்கு மிசிற்லால் நகைகளை எடுத்து காட்டினார். ஒவ்வொரு நகைகளாக பார்த்த அவர்கள், கடைசியில் நகை வேண்டாம் என்று கூறி சென்றுவிட்டனர். அவர்கள் சென்ற பின்னர், நகைகளை சரிபார்த்தார். ஆனால் ஒரு பெட்டியில் இருந்த நகைகளை காணவில்லை.

இதனையடுத்து கடைக்கு வந்த தருண்குமார், கடையில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தார்.

அப்போது அந்த 2 பெண்களும் பெட்டியில் இருந்த நகைகளை திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து கொருக்குப்பேட்டை போலீசில் அவர் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து 2 பெண்களையும் தேடி வந்தனர். இதுபோன்ற கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுபவர்களின் பட்டியல் சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள குற்ற ஆவண காப்பகத்தில் உள்ளது. அவற்றை ஆய்வு செய்தபோது, நகைக்கடையில் கைவரிசை காட்டியது வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலுகாவை சேர்ந்த மணி என்பவரது மனைவி பாரதி (வயது 45), ஜோலார்பேட்டையை சேர்ந்த சூர்யகுமார் என்பவரது மனைவி அலமேலு (37) என்பது தெரியவந்தது.

இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 70 கிராம் நகை மீட்கப்பட்டது. இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Next Story