ஆந்திர தடுப்பணைகளால் நீர்வரத்து குறைந்தது, மோர்தானா அணை கால்வாய்கள் தூர்ந்து போன அவலம்


ஆந்திர தடுப்பணைகளால் நீர்வரத்து குறைந்தது, மோர்தானா அணை கால்வாய்கள் தூர்ந்து போன அவலம்
x
தினத்தந்தி 27 Jun 2019 4:15 AM IST (Updated: 27 Jun 2019 5:42 AM IST)
t-max-icont-min-icon

ஆந்திர தடுப்பணைகளால் மோர்தானா அணைக்கு நீர்வரத்து குறைந்ததால் தற்போது காணப்படும் வெப்பம் காரணமாக அணை தண்ணீரின்றி வறண்டு வருகிறது. மேலும் இதனை நம்பியுள்ள ஏரிகளும் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளதால் மாவட்ட நிர்வாகம் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

குடியாத்தம்,

வேலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய அணையாக மோர்தானா அணை உள்ளது. இந்த அணை குடியாத்தத்தில் இருந்து 24 கி.மீ தொலைவில் கவுண்டன்ய மகாநதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் புங்கனூர், பலமநேர், நாயக்கனேரி பகுதிகளிலும், அதனை ஒட்டிய வனப்பகுதிகளிலும் பெய்யும் மழைநீரால் இந்த அணை நிரம்புகிறது.

கடந்த 2000-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதியால் இந்த அணை திறந்து வைக்கப்பட்டது. 392 மீட்டர் நீளம் உள்ள இந்த அணையின் முழு உயரம் 23.89 மீட்டர் ஆகும். இதன் நீர்த்தேக்க உயரம் 11.5 மீட்டர் ஆகும். இந்த அணையின் கொள்ளளவு 262 மில்லியன் கனஅடி ஆகும்.

அணையில் இருந்து வெளியேறும் தண்ணீர் ஜிட்டப்பல்லி தடுப்பணையை சென்றடைகிறது. அங்கிருந்து வலது, இடது புற கால்வாய்கள் வழியாகவும், பொதுகால்வாய் வழியாகவும், கவுண்டன்ய மகாநதி ஆற்றின் வழியாகவும் தண்ணீர் செல்கிறது.

கவுண்டன்ய மகாநதி ஆற்றின் மூலம் செல்லும் தண்ணீர் மோர்தானா, கொட்டாரமடுகு பகுதிகளில் பாசனத்துக்கு பயன்படுகிறது. பொதுக்கால்வாயில் திறந்து விடும் தண்ணீர் ஜிட்டப்பல்லி, சேம்பள்ளி, ரங்கசமுத்திரம் பகுதிகளில் பாசனத்துக்கு பயன்படுகிறது.

மேலும் வலது மற்றும் இடது புற கால்வாய் மூலம் திறக்கப்படும் தண்ணீரால் சீவூர், செதுக்கரை, அம்மணாங்குப்பம், வேப்பூர், பசுமாத்தூர், காவனூர், அக்ராவரம், பெரும்பாடி, எர்த்தாங்கல், நெல்லூர்பேட்டை, தாழையாத்தம், செருவங்கி, செட்டிகுப்பம், மேல்முட்டுக்கூர், மேல்ஆலத்தூர், கூடநகரம், பட்டு, ஒலக்காசி, சித்தாத்தூர் உள்ளிட்ட 30 கிராமங்களில் பாசன வசதியை பெறுகிறது. மேலும் குடியாத்தம் நகரில் குடிநீர் பிரச்சினையையும் தீர்க்கிறது. இந்த அணை மூலம் 8 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.

கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் அணையில் 255 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கி இருந்தது. அப்போது விவசாயம் மற்றும் குடிநீருக்காக அணை தண்ணீர் திறந்து வைக்கப்பட்டது. ஆனால் தற்போது அணையில் 1 மீட்டர் உயரத்திற்கும் குறைவாக (சுமார் 3 அடிக்கும் கீழே) சுமார் 8 மில்லியன் கனஅடி தண்ணீரே உள்ளது. மழை பெய்யாவிடில் இன்னும் சில நாட்களில் இந்த தண்ணீரும் குறைந்து ‘டெத் ஸ்டோரேஜ்’ அளவுக்கும் (பயன்படுத்த முடியாத இருப்பு தண்ணீர்) கீழே சென்றுவிடும். தற்போது அணையின் வறண்ட பகுதியில் கால்நடைகள் மேய்ச்சலில் உள்ளது. அணை வறண்டதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

இந்த அணைக்கு நீர்ஆதாரமான ஆந்திர மாநில பகுதியில் பல தடுப்பு அணைகள் கட்டப்பட்டுள்ளதால் மழை காலங்களில் தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்து விட்டது. மோர்தானா அணை தண்ணீரால் கவுண்டன்ய மகாநதி ஆற்றின் பாதையிலும், வலது மற்றும் இடபுற கால்வாய் மூலம் ஏரிகள் நிரம்பி கிராமப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, குடிநீருக்கும் உதவியாக இருந்தது.

அணை வறண்டதால் தற்போது நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. மழைக்காலம் தொடங்கும் முன்பாக அரசு முன்னேற்பாடாக மோர்தானா அணையை தூர்வாரி 262 மில்லியன் கனஅடியில் இருந்து 300 மில்லியன் கனஅடி தண்ணீர் தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வலது மற்றும் இடது புற கால்வாய்கள் முட்புதர்களால் தூர்ந்து போய் விட்டன. அவற்றை தூர்வாரி முட்புதர்களை அகற்ற வேண்டும்.

ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி ஏரிகளில் முழு கொள்ளளவு தண்ணீர் தேங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பழுதான மதகுகளை புதிதாக பொருத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆந்திர மாநில பகுதிகளில் புதிதாக தடுப்பணை கட்டாமல் இருக்க தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மழைக்காலங்களில் அணைக்கு வரும் தண்ணீர் ஆந்திர பகுதியில் இருந்து தங்குதடையின்றி கிடைக்க தமிழக அரசு கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அவர் கள் கூறினர்.

Next Story