தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு-அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தேனி,
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் 70-க்கும் மேற்பட்டோர் நேற்று மாலையில் வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாவட்ட செயலாளர் நாகலட்சுமி தலைமை தாங்கினார்.
அரசு உத்தரவுக்கு புறம்பாக தொடங்கப்பட்ட மழலையர் வகுப்புகளில் சேர்க்கப்பட்ட குழந்தைகளை அங்கன்வாடி மையங்களில் சேர்க்க வேண்டும் என்றும், அங்கன்வாடி மையங்களை பாதுகாக்க வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் அவர்கள் மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவிடம் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் சில தொடக்கப் பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. ஆகிய மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட்டு 3 வயது முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளை சேர்த்துள்ளதால் அங்கன்வாடி மையங்களுக்கு குழந்தைகள் வருகை குறைந்துள்ளது.
இதனால் அங்கன்வாடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதன் நோக்கம் பாதிக்கப்படுவதால், குழந்தைகளை அங்கன்வாடி மையங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நடுநிலைப்பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்பட்டு அரசு உத்தரவுக்கு புறம்பாக பள்ளிகளுடன் இணைத்து நடத்தி வருகிறார்கள். எனவே இதுபோன்ற குழந்தைகளை அந்தந்த அங்கன்வாடி மையங்களுக்கு அனுப்பி வைக்கவும், அரசு உத்தரவுப்படி இடைநிலை ஆசிரியர்கள் அங்கன்வாடி மையங்களுக்கு சென்று பாடம் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சில மேல்நிலைப்பள்ளிகளிலும் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்பட்டு குழந்தைகள் சேர்க்கப்பட்டு ஒரு குழந்தைக்கு ரூ.1,000 வீதம் வாங்குவது போன்ற அரசு விதிகளுக்கு புறம்பான நடவடிக்கைகள் நடந்து வருவதால் உடனே தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story