தேனி அருகே கொடுவிலார்பட்டியில், கண்மாய் தூர்வாரும் பணி - கலெக்டர் தொடங்கி வைத்தார்


தேனி அருகே கொடுவிலார்பட்டியில், கண்மாய் தூர்வாரும் பணி - கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 27 Jun 2019 4:00 AM IST (Updated: 27 Jun 2019 5:43 AM IST)
t-max-icont-min-icon

தேனி அருகே கொடுவிலார்பட்டியில் கண்மாய் தூர்வாரும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

தேனி,

தேனி அருகே கொடுவிலார்பட்டியில் புதுக்குளம் கண்மாய் அமைந்துள்ளது. இந்த கண்மாய் சுமார் 75 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதன் மூலம் 500-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

கொடுவிலார்பட்டி, சிவலிங்கநாயக்கன்பட்டி, பள்ளப்பட்டி, அரண்மனைப்புதூர் ஆகிய ஊர்களின் நிலத்தடி நீர்மட்டம் உயர்வுக்கான ஆதாரமாகவும் இந்த கண்மாய் திகழ்கிறது. பல ஆண்டுகளாக தூர்வாரப்படாத இந்த கண்மாய் புதர்மண்டிக் கிடக்கிறது. கண்மாயில் ஒரு பகுதியில் கரையே இல்லாத நிலைமை உள்ளது. இதனால், தண்ணீர் தேங்கும் அளவும் குறைந்து விட்டது. கண்மாய் பகுதியை குப்பைக்கிடங்காக மாற்றிய அவலமும் ஏற்பட்டது. இந்த கண்மாயை தூர்வார வேண்டும் என்று மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்தநிலையில், தன்னார்வலர்கள் சிலர் இந்த கண்மாயை தூர்வார முன்வந்தனர். அதன்படி, இந்தியன் செஞ்சிலுவை சங்க நிர்வாகிகளுடன் தன்னார்வலர்கள், தேனி நீர்நிலைகள் பாதுகாப்பு இயக்கம் என்ற பெயரில் ஒரு குழுவாக இணைந்து இந்த கண்மாய் தூர்வாரும் பணியை நேற்று தொடங்கினர்.

இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில்,'மாவட்டத்தில் தன்னார்வலர்கள் நீர்நிலைகளை தூர்வார முன்வருவது மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. பொதுமக்கள் ஒத்துழைப்பு இருந்தால் இந்த பணிகளை விரைவில் முடித்து விடலாம். கண்மாய் தூர்வாரப்பட்டால் நிலத்தடி நீர்மேம்படும். எதிர்காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்கலாம். விவசாயிகள் தங்களின் விவசாய தேவைக்கும், நிலச்சீர்திருத்தம் செய்வதற்கும் இந்த கண்மாயில் இருந்து மண் எடுக்க விரும்பினால் அவர்கள் இலவசமாக மண் எடுத்துக் கொள்வதற்கு உடனடி அனுமதி கொடுக்கப்படும்' என்றார்.

இந்த நிகழ்ச்சியில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை பொதுச்செயலாளர் ராஜமோகன், இந்தியன் செஞ்சிலுவை சங்க கவுரவ தலைவர் சுருளிராஜ், தேனி நீர்நிலைகள் பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த தன்னார்வலர்களான ஆசிரியர் விஜயராஜ், சற்குரு, காமராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Next Story