நெல்லை, தூத்துக்குடி உள்பட 5 மாவட்டங்களில், ரூ.1,671 கோடியில் புதிய குடிநீர் திட்டப் பணிகள் -அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்
நெல்லை, தூத்துக்குடி உள்பட 5 மாவட்டங்களில் ரூ.1,671 கோடியில் புதிய குடிநீர் திட்டப் பணிகள் நடந்து வருகின்றது என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.
நெல்லை,
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் நடைபெற்று வரும் குடிநீர் திட்டப்பணிகள் மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்கினார்.
செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா வரவேற்று பேசினார். மதியம் 1.15 மணிக்கு தொடங்கிய ஆய்வு கூட்டம் மாலை 3.15 மணி வரை நடந்தது.
கூட்டத்துக்கு பிறகு உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது:-
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் நடைபெற்று வரும் குடிநீர் திட்டப்பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதுதவிர துறை சம்பந்தப்பட்ட பசுமை வீடு திட்டம், பாரத பிரதமரின் வீடு வழங்கும் திட்டம், கிராமச்சாலை திட்டப்பணிகள், திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
ரூ.1,671 கோடி செலவில்...
மேற்கண்ட 5 மாவட்டங்களில் புதிதாக பல்வேறு குடிநீர் திட்டப்பணிகள் நடந்து வருகின்றது. குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் 6 திட்டப்பணிகளும், தூத்துக்குடி மாவட்டத்தில் 3 திட்டப்பணிகளும், மற்ற 3 மாவட்டங்களில் 5 திட்டப்பணிகள் என மொத்தம் 5 மாவட்டங்களில் 14 பணிகள் திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. இதன் திட்ட மதிப்பு ரூ.1,671 கோடி ஆகும்.
இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருக்கிறோம். இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால், இனி 30 ஆண்டுகள் குடிநீர் பிரச்சினை இருக்காது. மக்கள் தொகை உயர்வின் அடிப்படையில்தான் இந்த திட்டம் தயார் செய்யப்பட்டு உள்ளது.
தமிழகம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாட்டை சரிசெய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. டெங்கு காய்ச்சல் கண்டறிய மாநிலம் முழுவதும் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் ஒவ்வொரு வீடு, வீடாக சென்று டெங்கு காய்ச்சலை கண்டறிந்தனர். அதன் அடிப்படையில் பரிசோதனை செய்யப்பட்டு, நோய் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சிறப்பு குழுக்கள்
அதேபோல் குடிநீர் பிரச்சினைகளை கண்டறிய சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவினர் ஒவ்வொரு கிராம பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்வார்கள். அதன் அடிப்படையில் குடிநீர் பிரச்சினையை போக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுபோல் மழை நீர் சேகரிப்பு திட்டம் மிகவும் முக்கியமானது. இந்த திட்டம் மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்பட்டால், நிலத்தடி நீர்மட்டம் உயரம். அதனால் புதிய குடியிருப்புகள், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுபவர்களுக்கு மழைநீர் சேகரிப்பு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது.
அதேபோல் மரக்கன்றுகள் வளர்க்கும் திட்டத்தையும் ஊக்குவித்து வருகிறோம். மரக்கன்றுகள் அவசியம் நட வேண்டும் என அறிவுறுத்தி வருகிறோம். குறிப்பாக பனை மரங்களை குளங்களுக்கு அருகே வளர்க்க வேண்டும் என உத்தரவிட்டு இருக்கிறோம். இந்த பனை மரங்களால் நிலத்தடி நீர் அதிக அளவு உயரும்.
இந்த திட்டங்கள் அனைத்தும் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்தது. அவர் வழியில் வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான இந்த அரசு அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. ஆற்று பகுதியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உலக வங்கி நிதி உதவியுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ‘அம்ருத்‘ என்ற திட்ட மூலம் தாமிரபரணி ஆற்றில் கழிவுகள் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் செயல்படும் அனைத்து திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கப்பட்டு, பணி நடந்து வருகிறது.
சென்னையில்கூட புதிய குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்துக்கு தேவையான நிதியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. தமிழக அரசு கேட்கின்ற அனைத்து திட்டங்களுக்கும் மத்திய அரசு நிதி ஒதுக்கி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வு கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் முருகையா பாண்டியன், ஐ.எஸ்.இன்பதுரை, செல்வமோகன்தாஸ் பாண்டியன், மனோகரன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை அரசு முதன்மை செயலாளர் ஹர்மந்தர்சிங், நகராட்சி நிர்வாக ஆணையாளர் கார்த்திகேயன், ஊராட்சித்துறை துணை இயக்குனர் பாஸ்கரன், பேரூராட்சிகளின் இயக்குனர் பழனிச்சாமி, குடிநீர் வழங்கல் மேலாண்மை இயக்குனர் மகேசுவரன், ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ், கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே, தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், முன்னாள் எம்.பி. பிரபாகரன், நெல்லை கூட்டுறவு பேரங்காடி தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story