குற்றாலத்தில், தங்கும் விடுதியில், கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை


குற்றாலத்தில், தங்கும் விடுதியில், கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 27 Jun 2019 4:00 AM IST (Updated: 27 Jun 2019 6:05 AM IST)
t-max-icont-min-icon

குற்றாலத்தில் தங்கும் விடுதியில் கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தென்காசி,

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் தனியார் தங்கும் விடுதிகள் ஏராளமாக உள்ளது. இங்குள்ள ஒரு தங்கும் விடுதியில் நேற்று முன்தினம் மாலையில் ஒரு வாலிபரும், ஒரு இளம்பெண்ணும் வந்தனர். அவர்கள் அங்கு ஒரு அறை எடுத்து ஒன்றாக தங்கினார்கள். ஆனால் அவர்களின் அறை கதவு நேற்று காலை வரை திறக்கப்படவில்லை. ஊழியர்கள் கதவை தட்டிப்பார்த்தும் திறக்கவில்லை.

மேலும் அந்த அறையில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த ஊழியர்கள் இதுகுறித்து குற்றாலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ், சப்-இன்ஸ்பெக்டர் ஜனார்த்தனன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பின்னர் அவர்கள், அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, அங்கு அந்த வாலிபர் விஷம் குடித்து இறந்து கிடந்தார். இளம்பெண் விஷம் அருந்தி விட்டு உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார். இதை பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். உடனே, அந்த இளம்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவரும் பரிதாபமாக இறந்தார். பின்னர் 2 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதன் விவரம் வருமாறு:-

நெல்லை மாவட்டம் புளியங்குடி கனகவிநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மகன் ஆனந்த கணேஷ் (வயது 23), சலவை தொழிலாளி. இவரது உறவினர்கள் வீரவநல்லூர் அருகே வெள்ளங்குழியில் உள்ளனர். இதனால் ஆனந்த கணேஷ் அடிக்கடி வெள்ளங்குழி பகுதிக்கு சென்று வந்தார்.

அப்போது, வெள்ளங்குழி இந்திரா நகரைச் சேர்ந்த சுடலை மனைவி ரேவதி (25) என்பவருக்கும், ஆனந்த கணேசுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது.

இவர்கள் நேற்று முன்தினம் மாலையில் வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் குற்றாலத்திற்கு சென்று அங்கு தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளனர். கள்ளக்காதல் விவகாரம் வெளியே தெரிந்ததால் அவமானம் தாங்காமல் அவர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

கள்ளக்காதல் ஜோடி தற்கொலைக்கு இதுதான் காரணமா? அல்லது வேறு ஏதாவது காரணம் உண்டா? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குற்றாலத்தில் தங்கும் விடுதியில் கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story