புதுப்பொலிவு பெறும் நாகர்கோவில் பொருட்காட்சி மைதானம் ரூ.40 லட்சத்தில் நடைமேடை, இரும்பு வேலி அமைக்கப்படுகிறது


புதுப்பொலிவு பெறும் நாகர்கோவில் பொருட்காட்சி  மைதானம் ரூ.40 லட்சத்தில் நடைமேடை, இரும்பு வேலி அமைக்கப்படுகிறது
x
தினத்தந்தி 28 Jun 2019 4:30 AM IST (Updated: 27 Jun 2019 10:51 PM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் உள்ள மகாராஜா ஸ்ரீஅவிட்டம் திருநாள் நினைவு மைதானம் (பொருட்காட்சி மைதானம்) சீரமைக்கப்படுகிறது. ரூ.40 லட்சம் செலவில் இரும்பு வேலி மற்றும் நடைமேடை அமைக்கப்பட்டு வருகிறது.

நாகர்கோவில்,

நாகர்கோவில் செட்டிகுளத்தில் இருந்து பீச்ரோடு செல்லும் சாலையில் மகாராஜா ஸ்ரீஅவிட்டம் திருநாள் நினைவு மாநகராட்சி மைதானம் (பொருட்காட்சி மைதானம்) உள்ளது. இந்த மைதானத்தின் முன் சுற்று சுவர் இருந்தது. இந்த சுவர் மிகவும் பாழடைந்து காணப்பட்டதாலும், சாலையின் மிக அருகில் சுற்று சுவர் இருந்ததாலும் அதை அகற்றிவிட்டு புதிதாக இரும்பு தடுப்பு வேலிகள் அமைக்க அதிகாரிகள் முடிவு செய்தனர்.

இதைத் தொடர்ந்து ஏற்கனவே இருந்த பழைய சுற்று சுவரை இடித்து அகற்றும் பணி கடந்த 2 நாட்களாக நடந்தது. இந்த பணிகள் தற்போது முடிவடைந்துவிட்டன. இதனையடுத்து சுற்று சுவருக்கு பதிலாக தடுப்பு கம்பிகள் அமைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. இந்த பணிகள் முடிவடைந்ததும் மைதானத்தின் முன் ரோட்டோரம் நடைமேடை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளன.

இதுபற்றி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “மகாராஜா ஸ்ரீஅவிட்டம் திருநாள் நினைவு மைதானத்தில்  தடுப்பு வேலி மற்றும் நடைமேடை அமைக்கும் பணிகள் சுமார் ரூ.40 லட்சம் செலவில் நடக்கிறது. சுமார் 530 அடி நீளம் வரை இரும்பு தடுப்பு வேலியும், நடைமேடையும் அமைக்கப்பட உள்ளன. இதனால் மைதானம் புதுப்பொலிவுடன் காட்சி அளிக்க உள்ளது. மைதானத்தின் முன், ஏற்கனவே சுவர் இருந்த இடத்தில் இருந்து 3 அடி தூரம் உள்நோக்கி இந்த தடுப்பு வேலிகள் அமைக்கப்படுகின்றன. இதன் மூலம் போக்குவரத்து நெரிசல் குறையும். நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சாலைகளில் பீச்ரோடு–செட்டிகுளம் சாலையும் ஒன்று என்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது’’ என்றார்.

Next Story