திருச்செந்தூரில் குடிநீர் குழாய் பதிக்க பள்ளம் தோண்ட நெடுஞ்சாலைத்துறை எதிர்ப்பு


திருச்செந்தூரில் குடிநீர் குழாய் பதிக்க பள்ளம் தோண்ட நெடுஞ்சாலைத்துறை எதிர்ப்பு
x
தினத்தந்தி 27 Jun 2019 10:15 PM GMT (Updated: 27 Jun 2019 6:38 PM GMT)

திருச்செந்தூரில் குடிநீர் குழாய் பதிப்பதற்கு பள்ளம் தோண்ட நெடுஞ்சாலைத்துறையினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் நகர பஞ்சாயத்துக்கு ஆத்தூர், கானம், பொன்னங்குறிச்சி, குரங்கணி ஆகிய குடிநீர் திட்டங்கள் மூலம் குடிநீர் கொண்டு வரப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது. ஆத்தூர், கானம் ஆகிய குடிநீர் திட்டங்கள் மூலம் திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் உள்ள தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.

இதில் கானம் குடிநீர் திட்டத்தில் திருச்செந்தூர் டி.பி.ரோட்டில் பதிக்கப்பட்ட குழாயில் கழிவுநீர் கலப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து அந்த இணைப்பு துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து அந்த குழாய்க்கு பதிலாக, டி.பி. ரோட்டில் மாற்று இடத்தில் பள்ளம் தோண்டி, குழாய் பதிக்க திட்டமிடப்பட்டது. இதையடுத்து திருச்செந்தூர் நகர பஞ்சாயத்து நிர்வாகத்தினர் நேற்று டி.பி. ரோட்டில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக சாலையோரமாக பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டினர்.

இதற்கிடையே அங்கு வந்த நெடுஞ்சாலைத்துறை சாலை ஆய்வாளர் ராணி உள்ளிட்ட அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறையிடம் அனுமதி வாங்காமல் சாலையோரம் பள்ளம் தோண்டப்படுவதாக கூறி, குடிநீர் குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு அதிகாரிகள் செல்போனில் தகவல் தெரிவித்தனர். அப்போது அமைச்சர் கடம்பூர் ராஜூ, குடிநீர் குழாய் பதிக்க பள்ளம் தோண்டுவதற்கு நகர பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில், நெடுஞ்சாலைத்துறையிடம் விண்ணப்பித்து, உரிய கட்டணம் செலுத்துவார்கள் என்று தெரிவித்தார்.

இதையடுத்து அங்கு பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டி, குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடந்தது. இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது. கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்செந்தூர் பகத்சிங் பஸ் நிலையம் அருகிலும் குடிநீர் குழாய் பதிக்க பள்ளம் தோண்டுவதற்கு நெடுஞ்சாலைத்துறையினர் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story