திருவாரூர்-காரைக்குடி வழித்தடத்தில் 3 பெட்டிகளுடன் ரெயில்கள் இயக்கம் குடிநீர் கிடைக்காமல் பயணிகள் அவதி


திருவாரூர்-காரைக்குடி வழித்தடத்தில் 3 பெட்டிகளுடன் ரெயில்கள் இயக்கம் குடிநீர் கிடைக்காமல் பயணிகள் அவதி
x
தினத்தந்தி 28 Jun 2019 4:30 AM IST (Updated: 28 Jun 2019 12:10 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர்-காரைக்குடி வழித்தடத்தில் 3 பெட்டிகளுடன் ரெயில்கள் இயக்கப்பட்டன. குடிநீர் கிடைக்காமல் பயணிகள் அவதிப்பட்டனர்.

பட்டுக்கோட்டை,

திருவாரூர்-காரைக்குடி வழித்தடத்தில் இந்த மாதம் (ஜூன்) 27-ந் தேதி முதல் தினமும் 3 பெட்டிகளுடன் ‘டெமு’ ரெயில்கள் இரு மார்க்கத்திலும் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்து இருந்தது. திருவாரூரில் இருந்து காலை 8.15 மணிக்கு புறப்படும் ரெயில் மாலை 4.15 மணிக்கு காரைக்குடி சென்றடையும் என்றும், காரைக்குடியில் இருந்து காலை 9.45-க்கு புறப்படும் ரெயில் மாலை 5.45 மணிக்கு திருவாரூர் சென்றடையும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி நேற்று காலை 8.15 மணிக்கு திருவாரூரில் இருந்து காரைக்குடிக்கு ‘டெமு’ ரெயில் 3 பெட்டிகளுடன் புறப்பட்டது. இந்த ரெயில் திருத்துறைப்பூண்டி, தில்லைவிளாகம், முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம் வழியாக பட்டுக்கோட்டைக்கு நண்பகல் 12 மணிக்கு வந்தடைந்தது.

அதேபோல காரைக்குடியில் இருந்து திருவாரூருக்கு காலை 9.45 மணிக்கு 3 பெட்டிகளுடன் புறப்பட்ட ரெயில் கண்டனூர் புதுவயல், அறந்தாங்கி மேற்பனைக்காடு, பேராவூரணி வழியாக பட்டுக்கோட்டை ரெயில் நிலையத்துக்கு மதியம் 1.22 மணிக்கு வந்தடைந்தது. இதனால் கிராசிங்குக்காக காரைக்குடி செல்லும் ரெயில் பட்டுக்கோட்டையில் 1½ மணி நேரம் காத்திருக்க வேண்டி இருந்தது.

இரு மார்க்கத்தில் இருந்து 2 ரெயில்களும் 3 பெட்டிகளுடன் மட்டுமே இயக்கப்பட்டதால் பயணிகள் மத்தியில் வரவேற்பு குறைவாகவே இருந்தது. ரெயில்களில் குடிநீர் வசதியும் செய்து தரப்படவில்லை. இதனால் பயணிகள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டனர். இந்த வழித்தடத்தில் கேட்கீப்பர் நியமிக்கப்படாத காரணத்தால் திருவாரூரில் இருந்து காரைக்குடி செல்ல 8 மணி நேரத்துக்கு மேல் ஆகிறது என பயணிகள் வேதனை தெரிவித்தனர். இந்த ரெயில் போக்குவரத்து ஆகஸ்டு 30-ந் தேதி வரை நீடிக்கும் என தெரிகிறது.

இதுகுறித்து பயணிகள் கூறியதாவது:-

திருவாரூர்-காரைக்குடி வழித்தடத்தில் இயக்கப்படும் ரெயில்களின் பயண நேரம் 8 மணிநேரமாக உள்ளது. முன்பு மீட்டர்கேஜ் பாதையில் பயண நேரம் 3½ மணி நேரமாக இருந்தது. அதேபோல தற்போதும் பயண நேரத்தை குறைக்க வேண்டும். இந்த வழித்தடத்தில் உள்ள பட்டுக்கோட்டை உள்பட பெரும்பாலான ரெயில் நிலையங்களில் குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை. இதை அதிகாரிகள் கவனித்து உடனடியாக குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும்.

மேலும் திருவாரூரில் இருந்தும், காரைக்குடியில் இருந்தும் ஒரே நேரத்தில் ரெயில்கள் புறப்பட்டால் கிராசிங்குக்காக அதிக நேரம் காத்திருக்க வேண்டி இருக்காது. இதுகுறித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு பயணிகள் கூறினர். 

Next Story