அங்கன்வாடி கட்டிடத்திற்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை


அங்கன்வாடி கட்டிடத்திற்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 28 Jun 2019 4:15 AM IST (Updated: 28 Jun 2019 12:30 AM IST)
t-max-icont-min-icon

சங்கமங்கலம் அங்கன்வாடி கட்டிடத்திற்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கீழ்வேளூர்,

நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த சங்கமங்கலத்தில் அங்கன்வாடி கட்டிடம் அமைந்துள்ளது. இந்த கட்டிடம் 2015-ம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டப்பட்டது. சங்கமங்கலம், பழையனூர் மேல்பாதி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட பள்ளி செல்லா சிறு குழந்தைகள் சேர்க்கப்பட்டு, அவர்களுக்கு உணவு மற்றும் கல்வித்திறன் வழங்கப்பட்டு வருகிறது. கிராமப்புறத்தை சேர்ந்த இப்பகுதியில் உள்ள பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை காலையில் அங்கன்வாடி மையத்தில் விட்டு விட்டு மாலையில் அழைத்து செல்வது வழக்கம்.

மின் இணைப்பு வேண்டும்

இந்த நிலையில் சிறு குழந்தைகளின் நலனுக்காக கட்டப்பட்ட இந்த அங்கன்வாடி கட்டிடத்திற்கு, கட்டப்பட்ட நாள் முதல் இதுவரை மின் இணைப்பு வழங்கப்படமால் உள்ளது. இதனால் அங்கன்வாடிக்கு செல்லும் குழந்தைகள் பகல் நேரத்தில் இருளிலும், மின்விசிறி இல்லாமலும் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். மழை காலங்களில் தொடர் பராமரிப்பு இல்லாத காரணத்தால் கட்டிடத்தின் சுவர்கள் பழுது ஏற்பட்டு வருகிறது.

இதுகுறித்து குழந்தைகளின் பெற்றோர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. எனவே குழந்தைகளின் நலன் கருதி நாகை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் அங்கன்வாடி கட்டிடத்திற்கு மின் இணைப்பு வழங்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story