ஆவடி அருகே டிரான்ஸ்பார்மரில் ஏறியபோது மின்சாரம் தாக்கி ஊழியர் பலி


ஆவடி அருகே டிரான்ஸ்பார்மரில் ஏறியபோது மின்சாரம் தாக்கி ஊழியர் பலி
x
தினத்தந்தி 28 Jun 2019 4:00 AM IST (Updated: 28 Jun 2019 12:51 AM IST)
t-max-icont-min-icon

ஆவடி அருகே டிரான்ஸ்பார்மரில் ஏறியபோது மின்சாரம் தாக்கி மின் ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆவடி,

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த முத்துகொண்டாபுரம் அடுத்த சீத்தாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பானி (வயது 48). இவர் ஆவடி அடுத்த கோவில்பதாகை பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை 8 மணிக்கு ஆவடி அடுத்த சத்தியமூர்த்தி நகர் காவலர் குடியிருப்பில் மின்சாரம் தடைபட்டு இருப்பதாக தகவல் கிடைத்தது. உடனே பானி அங்கு சென்றார்.

அங்குள்ள டிரான்ஸ்பார்மரில் ஏறியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி டிரான்ஸ்பார்மரிலேயே தொங்கியபடி உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருமுல்லைவாயல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இறந்த பானிக்கு புவனேஸ்வரி (39) என்ற மனைவியும், விக்னேஷ் (20), சந்தோஷ் (18) என 2 மகன்களும் உள்ளனர். மின்தடையை சரி செய்வதற்காக டிரான்ஸ்பார்மரில் ஏறிய மின் ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story