சிறப்பு மனுநீதி நிறைவு நாள் விழாவில் பயனாளிகளுக்கு ரூ.2 கோடியில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்


சிறப்பு மனுநீதி நிறைவு நாள் விழாவில் பயனாளிகளுக்கு ரூ.2 கோடியில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்
x
தினத்தந்தி 28 Jun 2019 4:15 AM IST (Updated: 28 Jun 2019 1:05 AM IST)
t-max-icont-min-icon

சிறப்பு மனுநீதி நிறைவு நாள் விழாவில் பயனாளிகளுக்கு ரூ.2 கோடியில் நலத்திட்ட உதவிகள் மாவட்ட கலெக்டர் சாந்தா வழங்கினார்.

மங்களமேடு,

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தாவின் சிறப்பு மனுநீதி நிறைவு நாள் விழா குன்னம் தாலுகா ஒகளூர் கிராமத்தில் நடந்தது. விழாவில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை உள்ளிட்ட பல துறைகள் சார்ந்த திட்டங்கள் குறித்தும், இத்திட்டங்கள் மூலமாக பொதுமக்கள் பயன்பெறுவதற்குண்டான வழிமுறைகள் குறித்தும் தொடர்புடைய அலுவலர்களால் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. பின்னர் கலெக்டர் சாந்தா வருவாய்த்துறை (சமூக பாதுகாப்பு திட்டம் உள்பட) இலவச வீட்டு மனைப்பட்டா, நத்தம் பட்டா மாற்றம், முதல்- அமைச்சரின் சாலை விபத்து நிவாரண உதவித்தொகை, திருமண உதவித்தொகை, இயற்கை மரண உதவித்தொகை உள்ளிட்ட திட்டங்கள் மூலம் 251 பயனாளிகளுக்கு ரூ.83 லட்சத்து 60 ஆயிரத்து 200 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், மாவட்ட சமூக நலத்துறை மூலம் 9 பயனாளிகளுக்கு ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் முதல்- அமைச்சரின் 2 பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

344 பயனாளிகளுக்கு...

மேலும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் 6 பயனாளிகளுக்கு ரூ.36 ஆயிரத்து 240 மதிப்பிலான விலையில்லா தையல் எந்திரம் மற்றும் சலவைப்பெட்டி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும் என பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 344 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 95 லட்சத்து 65 ஆயிரத்து 115 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி, ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் சீனிவாசன், வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், சமூக பாதுகாப்புத் திட்டத்தின் உதவி கலெக்டர் மனோகரன், குன்னம் தாசில்தார் சித்ரா, மாவட்ட நூலக அலுவலர் அசோகன், கிராம நிர்வாக அதிகாரிகள், ஊராட்சி செயலாளர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story