விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், பணி பாதுகாப்பு வழங்கக்கோரி டாக்டர்கள் போராட்டம்
விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணி பாதுகாப்பு வழங்கக்கோரி டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு பயிற்சி டாக்டராக பணிபுரிபவர் முகுந்தன் (வயது 29). முதுகலை பட்ட மேற்படிப்பு முதலாம் ஆண்டு மாணவரான இவர் பொது அறுவை சிகிச்சை பிரிவில் பணிபுரிகிறார்.
இவர் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் மருத்துவமனையில் பணியில் இருந்தார். அப்போது ஏற்கனவே விபத்தில் காயமடைந்து உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வரும் செஞ்சி அருகே பாலப்பட்டை சேர்ந்த அர்ச்சுனன் மனைவி எல்லம்மாளுக்கு (60) அளிக்கப்பட்டுள்ள சிகிச்சை விவரம் குறித்து அவரது மகன் ராமமூர்த்தி (40), டாக்டர் முகுந்தனிடம் கேட்டுள்ளார். மேலும் ராமமூர்த்தி தனது செல்போனில் யாரையோ தொடர்பு கொண்டு போனில் எம்.எல்.ஏ. பேசுகிறார் என்றும் பேசுங்கள் என்று கூறி பயிற்சி டாக்டர் முகுந்தனை தரக் குறைவாக பேசி கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.
இந்த சம்பவத்தை கண்டித்தும், பயிற்சி டாக்டர் முகுந்தனை தாக்கிய ராமமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நேற்று காலை 9 மணியளவில் மருத்துவமனை முன்பு டாக்டர்கள், பயிற்சி டாக்டர்கள், மருத்துவ கல்லூரி மாணவர்கள் ஆகியோர் ஒன்று திரண்டு கருப்பு பட்டை அணிந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு திருமால் மற்றும் போலீசார் கல்லூரி முதல்வர் சங்கரநாராயணன் ஆகியோர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பயிற்சி டாக்டர் முகுந்தன் கொடுத்துள்ள புகார் மனு மீது வழக்குப்பதிவு செய்து அவரை தாக்கிய ராமமூர்த்தியை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், டாக்டர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கவும் நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர்.
இதனை ஏற்ற டாக்டர்கள், பயிற்சி டாக்டர்கள் அனைவரும் காலை 10.30 மணியளவில் தங்கள் போராட்டத்தை கைவிட்டு மீண்டும் பணிக்கு திரும்பினர். அதன் பிறகு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியை மேற்கொண்டனர்.
Related Tags :
Next Story