5 வீடுகளின் பூட்டை உடைத்து திருட முயற்சி - 3 பேர் கைது
வீரபாண்டி பகுதியில், 5 வீடுகளின் பூட்டை உடைத்து திருட முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
உப்புக்கோட்டை,
வீரபாண்டி காட்டு காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது 63). இவர், விராலிமலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அவருடைய மனைவி சாந்தா (61). கடந்த 21-ந்தேதி வேலை விஷயமாக, விராலிமலைக்கு ராஜா சென்று விட்டார். சாந்தா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.
அதிகாலை 3.15 மணி அளவில் கதவை உடைக்கும் சத்தம் கேட்டு சாந்தா திடுக்கிட்டு எழுந்தார். பின்னர் அங்கு சென்று பார்த்தபோது மர்மநபர் ஒருவர் காவி வேட்டி அணிந்து, முகத்தை மூடியப்படி நின்று கொண்டிருந்தார். திடீரென அவர், சாந்தா அணிந்திருந்த 6 பவுன் சங்கிலியை பறித்து கொண்டு தப்பி ஓடி விட்டார்.
இதேபோல் வீரபாண்டி 2-வது வீதியை சேர்ந்த சதீஷ் (43), அம்மன் நகரை சேர்ந்த கராத்தே மாஸ்டர் அனிதா வீரணன் (37), கோபால் (55), மாரிச்சாமி (50), சிவசக்தி நகரை சேர்ந்த மாரியம்மாள் (50) ஆகிய 5 பேரின் வீடுகளில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் திருடய முயன்றனர். ஒரே நாளில் நடந்த 6 சம்பவங்களால் போலீசாரும், பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த சம்பவங்கள் குறித்து வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் மர்ம நபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். விசாரணையில், வீரபாண்டி அருகே உள்ள காமாட்சிபுரம் சந்தனமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அருண் என்ற ரமேஷ் (27), மாரிச்செல்வம் (26), ஹரீஷ் என்ற ஹரிதாஸ் (24) ஆகியோருக்கு நகை பறிப்பு மற்றும் திருட்டு முயற்சி சம்பவங்களில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சாந்தாவிடம் பறித்த 6 பவுன் சங்கிலி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story