“தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யுங்கள்”- சி.பி.ஐ.க்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
“தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு விசாரணை குறித்த அறிக்கையை தாக்கல் செய்யுங்கள்” என்று சி.பி.ஐ.க்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.
மதுரை,
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த ஆண்டு மே மாதம் பொதுமக்கள் ஊர்வலம் சென்றனர். அப்போது அவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலர் பலியானார்கள். இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.
இந்தநிலையில் மதுரை ஐகோர்ட்டில் சி.பி.ஐ. இயக்குனர் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், “தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான வழக்கை 4 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஐகோர்ட்டு உத்தரவிட்டது. துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 222 வழக்குகளையும் ஒரே வழக்காக பதிவு செய்து சி.பி.சி.ஐ.டி. விசாரித்தது. பின்னர் அந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. அதன் அடிப்படையில் பல்வேறு விசாரணை நடத்தப்பட்டுள்ளது. மேலும் விசாரணை செய்ய வேண்டி இருப்பதால், இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஏற்கனவே வழங்கப்பட்ட அவகாசத்தை நீட்டித்து உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ. தரப்பு வக்கீல் ஆஜராகி, “தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மதுரை ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் சி.பி.ஐ. போலீசார் விசாரிக்கின்றனர். இதுவரை 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்களிடம் விசாரிக்க வேண்டியுள்ளது“ என்று வாதாடினார்.
துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணை கேட்டு வழக்கு தொடர்ந்த கதிரேசனின் வக்கீல் ஆஜராகி, “சி.பி.ஐ. போலீசாருக்கு கோர்ட்டு அளித்த காலக்கெடு முடிந்து 6 மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது. இந்த சம்பவத்தை விசாரிக்கும் ஒரு நபர் கமிஷனை போலவே துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் என்ன? என்ற கோணத்திலேயே சி.பி.ஐ.யும் விசாரணை செய்து வருகிறது. இந்த சம்பவத்தில் 13 பேர் பலியானது தொடர்பாக இதுவரை கொலை வழக்கு பதிவு செய்யப்படவில்லை“ என்று வாதாடினார்.
விசாரணை முடிவில், சி.பி.ஐ விசாரணைக்கு கால அவகாசம் நிர்ணயம் செய்ய முடியாது என ஏற்கனவே பல வழக்குகளில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதன்படி இந்த வழக்கிலும் விசாரணையை முடிப்பதற்கு கால அவகாசம் நிர்ணயம் செய்ய முடியாது. எனவே இந்த வழக்கில் சி.பி.ஐ. தரப்பில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை, விசாரணை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் விசாரணையை வருகிற செப்டம்பர் மாதம் 15-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Related Tags :
Next Story