பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்: குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க நடவடிக்கை கலெக்டர் உறுதி


பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்: குடிநீர்  பற்றாக்குறையை தீர்க்க நடவடிக்கை கலெக்டர்  உறுதி
x
தினத்தந்தி 28 Jun 2019 3:30 AM IST (Updated: 28 Jun 2019 1:29 AM IST)
t-max-icont-min-icon

காரைக்கால் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் உறுதி அளித்தார்.

காரைக்கால்,

காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் விக்ராந்த் ராஜா தலைமை தாங்கினார். துணை கலெக்டர் (வருவாய்) ஆதர்‌‌ஷ் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை தலைமை அதிகாரிகள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு புகார் மனுக்களை அளித்தனர். கூட்டத்தில், பெரும்பான்மையான மனுக்கள் குடும்ப அட்டை வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளோருக்கான சிவப்பு நிற அட்டை தரவேண்டும், இலவச மனைப்பட்டா தரவேண்டும், மனைப்பட்டாவில் பெயர் மாற்றம் செய்து தருவதில் தாமதத்தைக் களைய வேண்டும், முதியோர் ஓய்வூதியம் தர வேண்டும். நகர் பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்தடையை சரி செய்ய வேண்டும் என குறிப்பிட்டு இருந்தனர்.

மேலும் காரைக்கால் தெற்கு தொகுதிக்குட்பட்ட நடு ஓடுதுறை உள்ளிட்ட சில கிராமங்களில் குடிநீர் பற்றாக்குறை நிலவுவதைப் போர்க்கால முறையில் தீர்க்க வேண்டும், காரைக்காலில் ரூ.50 கோடியில் பிள்ளைத்தெருவாசல் துணைமின் நிலையம் செயல்பாட்டுக்கு வந்தும் அடிக்கடி ஏற்படும் மின் தடையைப் போக்கி, சீரான மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமப்புறங்களில் உள்ள அனைத்துச் சாலைகளையும் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதி, அரசு நிதியின் மூலம் புதுப்பிக்க வேண்டும். நகரப் பகுதியில் குடிநீர் குழாய் பதிப்புக்காக தோண்டப்பட்ட சாலைகளை விரைவாக சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை மனுக்கள் தரப்பட்டன.

புகார் மனுக்களைப் பெற்றுக்கொண்ட கலெக்டர் விக்ராந்த் ராஜா சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்துப் பேசினார். புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பான குறிப்புடன் மனுவை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். கூட்ட நிறைவில், அதிகாரிகளிடையே கலெக்டர் விக்ராந்த் ராஜா பேசியதாவது;-

குறைதீர்க்கும் கூட்டத்தில் அளித்த புகார்கள் மீது அதிகாரிகள் 15 நாள்களில் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மனுக்களை பரிசீலித்து ஓரிரு நாள்களில் தீர்க்க முடியும், முடியாது என்ற விவரத்தை விளக்கத்துடன் எழுத்து மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு உடனே அனுப்பவேண்டும்.

அரசுத்துறையினர் மதிய உணவுக்கு சென்றுவிட்டு குறித்த நேரத்தில் பணிக்கு வருகிறார்களா என்பதை அந்தந்த துறை அதிகாரிகள் கவனிக்க வேண்டும். புதுச்சேரியில் இருந்து காரைக்காலுக்கு வந்து பணி செய்வோர் விடுமுறை முடிந்து குறித்த நேரத்துக்கு பணிக்கு வரவேண்டும்.

தற்போது பல்வேறு அலுவலகங்களில் நடத்திய ஆய்வில் தாமதமாக வந்தோர் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக சி.எல். என்கிற விடுப்பு குறைக்கப்படுகிறது. தொடர்ந்து தாமதமாக வருவோர் மீது ஊதிய பிடித்தம் செய்யப்படும். எனவே அதிகாரிகள், ஊழியர்கள் அனைவரும் அரசுப்பணியை முறையாக செய்ய வேண்டும். நேரம் தவறாது பணிக்கு வருவதோடு, மாலை பணி நேரம் வரை அலுவலகத்தில் இருக்க வேண்டும். இந்த நடவடிக்கைகள் கண்காணிக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் காரைக்கால் போலீஸ் சூப்பிரண்டுகள் மாரிமுத்து, வீரவல்லபன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Next Story