அதிக குழந்தைகளை ஏற்றிச்சென்ற ஆட்டோ டிரைவர்களுக்கு போக்குவரத்து விதிகள் குறித்து பயிற்சி போலீஸ் அதிகாரிகள் அளித்தனர்


அதிக குழந்தைகளை ஏற்றிச்சென்ற ஆட்டோ டிரைவர்களுக்கு போக்குவரத்து விதிகள் குறித்து பயிற்சி போலீஸ் அதிகாரிகள் அளித்தனர்
x
தினத்தந்தி 27 Jun 2019 11:00 PM GMT (Updated: 27 Jun 2019 8:00 PM GMT)

அதிக குழந்தைகளை ஏற்றிச்சென்ற ஆட்டோ டிரைவர்களுக்கு போக்குவரத்து விதிகள் குறித்து அதிகாரிகள் பயிற்சி அளித்தனர்.

திருச்சி,

திருச்சி நகரில் ஆட்டோ டிரைவர்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறி அனுமதிக்கப்பட்டதற்கு மாறாக அதிக குழந்தைகளை பள்ளிகளுக்கு ஏற்றிச்செல்வதாக ஏராளமான புகார்கள் வந்தன. இது பற்றி ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும்படி மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து நேற்று காலை திருச்சி நகரின் பல பகுதிகளிலும் போக்குவரத்து போலீசார் பள்ளிகளுக்கு சென்ற ஆட்டோக்கள் மற்றும் ஷேர் ஆட்டோக்களில் சோதனை போட்டனர். இந்த சோதனையின் போது விதி முறைகளை மீறி அதிக அளவில் குழந்தைகள் மற்றும் பயணிகளை ஏற்றிச்சென்ற 58 ஆட்டோ டிரைவர்கள் பிடிபட்டனர்.

பயிற்சி வகுப்பு

அவர்களுக்கு அபராதம் விதித்த போலீசார் பின்னர் அவர்களை திருச்சி பழைய கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள குழந்தைகள் போக்குவரத்து பூங்காவுக்கு அழைத்து சென்றனர். அங்குள்ள கூட்ட அரங்கத்தில் அவர்களுக்கு போக்குவரத்து விதிகள் பற்றி பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. திருச்சி மாநகர போக்குவரத்து ஒழுங்கு படுத்தும் பிரிவு போலீஸ் உதவி கமிஷனர்கள் அருணாச்சலம் (தெற்கு), ராஜன் (வடக்கு) ஆகியோர் போக்குவரத்து விதிமுறைகளை எவ்வாறு பின்பற்றவேண்டும், விதிமுறைகளை மீறினால் ஏற்படும் விபத்துக்கள், உயிரிழப்புகள் பற்றி எடுத்துக்கூறினார்கள். சுமார் 2 மணி நேரம் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

Next Story