உறவினருக்கு வங்கி கடன் வாங்கி கொடுத்ததில் தகராறு கல்லூரி பேராசிரியையின் கணவர் தற்கொலை


உறவினருக்கு வங்கி கடன் வாங்கி கொடுத்ததில் தகராறு கல்லூரி பேராசிரியையின் கணவர் தற்கொலை
x
தினத்தந்தி 27 Jun 2019 10:00 PM GMT (Updated: 27 Jun 2019 8:10 PM GMT)

உறவினருக்கு வங்கி கடன் வாங்கி கொடுத்ததால் ஏற்பட்ட தகராறில் கல்லூரி பேராசிரியையின் கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பூந்தமல்லி,

சென்னை வளசரவாக்கம் பழனியப்பா நகர், கோதாவரி தெருவை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 37). தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் டிரைவராக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி சாந்தி(34). இவர், அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து வீட்டுக்கு வந்த கணவன்-மனைவி இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. பின்னர் சாந்தி, அருகில் உள்ள கடைக்கு சென்றுவிட்டார்.

தூக்குப்போட்டு தற்கொலை

பின்னர் வீட்டுக்கு வந்தபோது, மணிகண்டனின் அறை கதவு நீண்டநேரமாக பூட்டியே கிடந்தது. கதவை தட்டியும் திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சாந்தி, ஜன்னல் வழியாக பார்த்தபோது, தனது கணவர் மணிகண்டன் தூக்கில் தொங்குவதை கண்டு அலறினார்.

சத்தம்கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று மணிகண்டனை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், மணிகண்டன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

கணவன்-மனைவி தகராறு

இதுகுறித்து வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், மணிகண்டன் தனது உறவினருக்கு வங்கியில் கடன் வாங்கி கொடுத்ததாகவும், அதற்குண்டான தொகையை உறவினர் கட்டாததால் மணிகண்டனே சில மாதங்கள் கட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும், இதில் மனமுடைந்த மணிகண்டன், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story