திருச்சி, அரியமங்கலம், சோமரசம்பேட்டையில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்


திருச்சி, அரியமங்கலம், சோமரசம்பேட்டையில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 28 Jun 2019 4:15 AM IST (Updated: 28 Jun 2019 1:40 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி, அரியமங்கலம், சோமரசம்பேட்டையில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

பொன்மலைப்பட்டி,

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி, திருச்சி அரியமங்கலத்தில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. அரிய மங்கலம் காவல்துறையினர் சார்பில் நடைபெற்ற இந்த ஊர்வலத்தை அரியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தரசு கொடியசைத்து தொடங்கிவைத்தார். ஊர்வலம், பொன்மலை சாலை, ஆயில்மில் பஸ் ஸ்டாப், மலையப்ப நகர் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்றது.

ஊர்வலத்தில் போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும், போதைக்கு அடிமையாகக்கூடாது என்பதை வலியுறுத்தியும் பள்ளி மாணவ, மாணவிகள், போலீசார், உயிர்துளி தன்னார்வல அமைப்பினர் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் கைகளில் பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர்.

விழிப்புணர்வு ஊர்வலம்

இதுபோல், சிகரம் குடிபோதை விழிப்புணர்வு ஆலோசனை மற்றும் மீட்பு மையம் சார்பில் விழிப் புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தை திருச்சி மாநகர் மாவட்ட கழக அ.தி.மு.க. செயலாளர் ப.குமார் தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போதைப்பொருள் ஒழிப்பு குறித்த பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் வைத்திருந்தனர்.

இந்த ஊர்வலம் கரூர் பைபாஸ் அருகில் உள்ள ராமமூர்த்தி நகரில் இருந்து தொடங்கி, சிந்தாமணி அண்ணா சிலை, சத்திரம் பஸ் நிலையம், கல்லூரி சாலை வழியாக காமராஜர் சிலை அருகில் சென்று நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் சிந்தாமணி கூட்டுறவு சங்க தலைவர் சகாதேவ பாண்டியன், அமராவதி கூட்டுறவு சங்க தலைவர் ஏர்போர்ட் விஜி, மலைக்கோட்டை பகுதி கழக அ.தி.மு.க. பொருளாளர் வணக்கம் சோமு, சிந்தாமணி நாடார் சங்க தலைவர் கலைமணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சோமரசம்பேட்டை

இதுபோல் சோமரசம்பேட்டை போலீசார் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தில் சோமரசம்பேட்டை புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியின் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் போலீசார் பங்கேற்றனர். ஊர்வலத்தை சோமரசம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தொடங்கி வைத்தார். ஊர்வலம், பள்ளியில் இருந்து தொடங்கி எம்.ஜி.ஆர். சிலை வரை சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. ஊர்வலத்தில் மாணவர்கள் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டைகளை கைகளில் ஏந்தி சென்றும் கோஷங்கள் எழுப்பியவாறும் சென்றனர்.

Next Story