பூண்டி ஏரியில் நீர் கசிவை தடுக்க வேதி கலவை பூசும் பணி தொடக்கம்


பூண்டி ஏரியில் நீர் கசிவை தடுக்க வேதி கலவை பூசும் பணி தொடக்கம்
x
தினத்தந்தி 28 Jun 2019 4:15 AM IST (Updated: 28 Jun 2019 1:58 AM IST)
t-max-icont-min-icon

பூண்டி ஏரியில் நீர் கசிவை தடுக்க வேதி கலவை பூசும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

செங்குன்றம்,

சென்னை நகர மக்களின் குடிநீர் தேவைகளை நிறைவேற்றும் ஏரிகளில் ஒன்று பூண்டி. இங்கு கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ரூ.45 லட்சம் செலவில் அணை கட்டும் பணிகள் 1940-ம் ஆண்டு தொடங்கப்பட்டு 1944-ம் ஆண்டு முடிக்கப்பட்டன. அப்போதைய சென்னை மேயராக இருந்த சத்தியமூர்த்தி அணை கட்ட அனைத்து முயற்சிகளும் மேற்கொண்டதால் அணைக்கு அவரது பெயர் சூட்டப்பட்டது. இந்த அணையின் உயரம் 35 அடி. இதில் 3 ஆயிரத்து 231 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம். 760 சதுரமைல் நீர் வரத்து பரப்பளவு கொண்ட அணையில் 16 மதகுகள் அமைக்கப்பட்டன.

40 அடி அகலம், 15 அடி நீளம் கொண்ட ஒவ்வொரு மதகும் அதிகபட்சமாக வினாடிக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் கனஅடி தண்ணீரை வெளியேற்ற கூடியதாக அமைக்கப்பட்டன.

வேதிகலவை பூசும் பணி

கோடை வெயில் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின் கீழ் கண்டலேறு அணையில் இருந்து நீர் வரத்து இல்லாததால் பூண்டி அணை தற்போது முழுவதுமாக வறண்டு காணப்படுகிறது. இந்த அணையில் ஷட்டர்களை தாங்கி நிற்கும் சுவர்களில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன. ஏரியில் தண்ணீர் தேங்கி நிற்கும்போது அந்த வெடிப்புகளில் இருந்து தண்ணீர் கசியும்.

இதனை தடுக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதிநவீன தொழில்நுட்பத்துடன் அந்த வெடிப்புகளில் வேதி கலவை பூசும் பணிகள் நடந்து வருகின்றன. 2 மாதங்களில் இந்த பணிகளை முடிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story