ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு, 3 வாலிபர்களுக்கு போலீஸ் காவல் - 5 நாட்கள் விசாரிக்க கோர்ட்டு அனுமதி
ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாக கைதான 3 வாலிபர்களை காவலில் வைத்து விசாரிக்க போலீசாருக்கு 5 நாட்கள் அனுமதி அளித்து கோவை கோர்ட்டு உத்தரவிட்டது.
கோவை,
இலங்கையில் கடந்த ஈஸ்டர் பண்டிகையின் போது தொடர்பு குண்டுவெடிப்புகள் நடந்தன. இதில் 250-க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். 500-க்கும் மேலானவர்கள் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாத அமைப்புடன் கோவையை சேர்ந்த சிலர் தொடர்பு கொண்டிருப்பதாக தேசிய புலனாய்வு அமைப்பினருக்கு(என்.ஐ.ஏ.) தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவர்கள் கோவை வந்து 7 இடங்களில் சோதனை நடத்தி 2 பேரை கைது செய்தனர். 4 பேரை விசாரணைக்காக கேரள மாநிலம் கொச்சிக்கு வருமாறு சம்மன் அனுப்பினார்கள். அதன்பேரில் அவர்கள் கொச்சி சென்று விசாரணைக்கு ஆஜரானார்கள்.
கோவையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்திய மறுநாள் அதாவது கடந்த 13-ந் தேதி கோவையில் சிலர் தடை செய்யப்பட்ட ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருப்பதாக நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கோவை தெற்கு உக்கடம் அன்பு நகரை சேர்ந்த ஷாஜகான் (வயது 27), வின்சென்ட் ரோட்டை சேர்ந்த முகமது உசேன் (30), கரும்புக் கடையை சேர்ந்த ஷேக் சபியுல்ல ா(28) ஆகியோரின் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தி மடிகணினி, பென் டிரைவ் உள்பட பல்வேறு எலக்டிரானிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர்கள் 3 பேர் மீதும் சட்டவிரோத செயல் தடுப்பு சட்ட (உபா) பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் 3 வாலிபர்களை காவலில் எடுத்து விசாரணை நடத்த போத்தனூர் போலீசார் திட்டமிட்டனர். இதற்கான மனுவை போலீசார் கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் கடந்த 25-ந் தேதி தாக்கல் செய்தனர். அந்த மனு நேற்று நீதிபதி சக்திவேல் முன்பு விசாரணைக்கு வந்தது. இதனால் குற்றம் சாட்டப்பட்ட ஷாஜகான், முகமது உசேன், ஷேக் சபியுல்லா ஆகிய 3 வாலிபர்களையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். அவர்களை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க போலீசார் அனுமதி கோரினார்கள்.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் ஆறுமுகம் வாதாடுகையில், ‘சர்வதேச பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடைய 3 பேரின் வீடுகளில் இருந்தும் ஆட்சேபகரமான பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக அவர்களிடம் கோவை போலீசார் மேலும் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. எனவே அவர்களை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரணை நடத்த போலீசாருக்கு அனுமதி அளிக்க வேண்டும்’ என்று வாதாடினார்.
அதற்கு எதிர் தரப்பில் ஆஜரான வக்கீல் ஆர்.கலையரசன் கடும் ஆட்சேபம் தெரிவித்தார். அப்போது அவர் வாதாடுகையில், கைது செய்யப்பட்ட 3 பேரின் வீடுகளில் இருந்தும் பயங்கரவாதம் தொடர்பான புத்தகங்கள் மற்றும் சட்ட விரோத பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். ஆனால் அந்த புத்தகங்கள் மற்றும் கையேடுகள் சாதாரணமானவை தான். அவை ஆன்லைனிலும், புத்தக கடைகளிலும் கிடைக்கின்றன. சட்டவிரோத பொருட்கள் எதுவும் கைப்பற்றப்பட வில்லை. இவர்களை ஏற்கனவே போலீசார் 3 நாட்கள் விசாரித்துள்ளனர். அவர்களிடம் மேற்கொண்டு விசாரிப்பதற்கு எதுவும் கிடையாது. எனவே 3 பேரையும் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க கூடாது என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சக்திவேல் பிறப்பித்த உத்தரவில், கைது செய்யப்பட்ட 3 பேரையும் 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. 2 நாட்களுக்கு ஒரு முறை மாலையில் 3 பேரையும் அவர்களின் வக்கீல்கள் சந்தித்து பேசலாம் என்று கூறியிருந்தார்.
இதைத் தொடர்ந்து ஷாஜகான், முகமது உசேன், ஷேக் சபியுல்லா ஆகிய 3 பேரையும் போலீசார் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story