தமிழ்நாட்டில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை சுகாதாரத்துறை செயலாளர் தகவல்


தமிழ்நாட்டில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை சுகாதாரத்துறை செயலாளர் தகவல்
x
தினத்தந்தி 28 Jun 2019 4:30 AM IST (Updated: 28 Jun 2019 2:23 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாட்டில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் கூறினார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனைத்துத்துறை அலுவலர்களுடன் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் பிரபாகர் முன்னிலை வகித்தார். சுகாதாரத்துறை செயலாளரும், கிருஷ்ணகிரி மாவட்ட வளர்ச்சி பணிகள் கண்காணிப்பு அலுவலருமான பீலாராஜேஷ் தலைமை தாங்கினார்.

இதில், மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள், குடிநீர் மேம்பாட்டு பணிகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-

தண்ணீர் தட்டுப்பாடு

கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. கடந்த ஆண்டு 56 சதவீதம் மழை பொழிவு குறைந்ததால் 70 சதவீத நீர் இருப்பு குறைந்துள்ளது. கிருஷ்ணகிரி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் வசிக்கும் 78 ஆயிரம் மக்களுக்கு நாள்தோறும் 8 மில்லியன் லிட்டர் தண்ணீர் வழங்க வேண்டும்.

தற்போது, ஒகேனக்கல் குடிநீர் திட்டம் மூலம் 4.75 மில்லியன் லிட்டரும், தென்பெண்ணை ஆறு, ஆழ் துளை கிணறுகள் மூலம் 4 மில்லியன் லிட்டர் தண்ணீர் வழங்கப்பட்டு வருகின்றது.

இதே போல், ஓசூர் நகராட்சியில் 45 வார்டுகளில் 2 லட்சத்து 80 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 22 மில்லியன் லிட்டர் தண்ணீர் வழங்க வேண்டும். தற்போது ஒகேனக்கல் குடிநீர் திட்டம் மற்றும் நீர் மேம்பாட்டு திட்டங்கள் மூலம் 18 மில்லியன் லிட்டர் தண்ணீர் வழங்கப்படுகிறது. பற்றாக்குறை உள்ள பகுதியில் டேங்கர் லாரி மூலம் குடிநீர் தடையின்றி வழங்கப்பட்டு வருகின்றன. இதே போல் ஓசூரில் ரூ.94 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. குடிநீர் திட்டப்பணிகள் ரூ.1½ கோடிக்கு நடைபெற்று வருவதால், எதிர்வரும் நாட்களில் குடிநீர்தட்டுபாடும் நீங்கும்.

திட்டப்பணிகள்

மேலும், மாவட்டத்தில் உள்ள 6 பேரூராட்சிகளில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு நாள்தோறும் 7 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவை உள்ளது. இதில், ஒகேனக்கல் குடிநீர் 3 மில்லியன் லிட்டரும், உள்ளூர் நீர் திட்டங்கள் மூலம் 4 மில்லியன் லிட்டர் தண்ணீரும் வழங்கப்படுகிறது. பேரூராட்சிகளில் தண்ணீர் தட்டுபாடு இல்லை. இருப்பினும் ரூ.45 லட்சம் மதிப்பில் குடிநீர் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கிராமப்புற ஊராட்சிகளில் 14 லட்சத்து 55 ஆயிரம் மக்களுக்கு 51 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவை உள்ளது. கிராம ஊராட்சிகளில் ஒகேனக்கல் குடிநீர் திட்டம் மூலம் 54 மில்லியன் லிட்டர் தண்ணீர் வழங்கப்பட்டு வருவதால், தண்ணீர் பற்றாக்குறை இல்லை. மழை பொழிவு குறைந்திருந்தாலும், ஒகேனக்கல் குடிநீரின் மூலம் பற்றாக்குறை சரி செய்யப்பட்டுள்ளது. மேலும், மாவட்டம் முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை தொடர்பாக 291 புகார்கள் வந்துள்ளன. இதில், 278 புகார்கள் மீதான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள புகார்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். வறட்சியால் தென்னை பாதிப்பு குறித்து வேளாண்மைத்துறை மூலம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். டெங்கு ஒழிப்பு பணிகள் கடந்த 2 மாதங்களுக்கு முன்பே தொடங்கப்பட்டுள்ளது. இதுவரை டெங்கு பாதிப்பு எங்கும் ஏற்படவில்லை. தமிழகத்தில் இதுவரை எங்கும் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வு

முன்னதாக, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட சுகாதார செயலாளர், நோயாளிகளிடம் குறைகள் கேட்டறிந்தார். இந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, மாவட்ட வன அலுவலர் தீபக் பில்கி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராமமூர்த்தி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் ஹரிகரன், மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் அசோக்குமார், சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பிரியாராஜ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story