திருக்கனூர் அருகே மனைவி, மகனை மிரட்ட தீக்குளித்த தொழிலாளி சாவு


திருக்கனூர் அருகே மனைவி, மகனை மிரட்ட தீக்குளித்த தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 27 Jun 2019 10:00 PM GMT (Updated: 27 Jun 2019 8:54 PM GMT)

திருக்கனூர் அருகே மனைவி, மகனை மிரட்டுவதற்காக தீக்குளித்த தொழிலாளி, பரிதாபமாகச் செத்தார்.

திருக்கனூர்,

உளுந்தூர்பேட்டையை சேர்ந்தவர் கலியமூர்த்தி (வயது 50), இவருடைய மனைவி சித்ரா (41). இவர்களுக்கு செல்வக்குமார் (26) என்ற மகன் உள்ளார். கலியமூர்த்தி கடந்த சில ஆண்டுகளாக புதுச்சேரி மாநிலம் திருக்கனூர் அருகே உள்ள செல்லிப்பட்டில் உள்ள ஒரு செங்கல்சூளையில் தங்கி, தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் கலியமூர்த்தி சரிவர வேலைக்கு செல்லாமல் அடிக்கடி மதுகுடித்து வந்தார். அதனை அவருடைய மனைவி சித்ராவும், மகன் செல்வக்குமாரும் கண்டித்தனர்.

சம்பவத்தன்றும் அதேபோல் கலியமூர்த்தி செங்கல்சூளை வேலைக்கு செல்லாமல், மதுகுடித்துவிட்டு வந்தார். அதனை அறிந்த அவருடைய மனைவியும், மகனும் அவரை கண்டித்தனர். அதனால் அவர்களிடம் வாக்குவாதம் செய்த கலியமூர்த்தி அவர்களை மிரட்டுவதற்காக தீக்குளிக்கப்போவதாக கூறி மண்எண்ணையை தனது உடலில் ஊற்றி தீவைத்துக்கொண்டார். இதில் அவருடைய உடல் முழுவதும் தீ பரவியதால் வேதனை தாங்காமல் அவர் அலறினார்.

அதனைப்பார்த்து அவருடைய மனைவி மற்றும் மகன் அதிர்ச்சி அடைந்து உடனடியாக அவரை மீட்டு புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலன் இல்லாமல் கலியமூர்த்தி பரிதாபமாகச் செத்தார்.

இது குறித்து திருக்கனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலு மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story