குமாரபாளையத்தில், திருமணமான 6 மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


குமாரபாளையத்தில், திருமணமான 6 மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 28 Jun 2019 4:30 AM IST (Updated: 28 Jun 2019 2:41 AM IST)
t-max-icont-min-icon

குமாரபாளையத்தில் திருமணமான 6 மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

குமாரபாளையம்,

குமாரபாளையத்தில் உள்ள அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் கவின்குமார் (வயது 28). பெயிண்டர். இவருக்கும் சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியை சேர்ந்த ஹேமா (23) என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. பின்னர் அவர் குமாரபாளையத்தில் உள்ள தனியார் பல் மருத்துவமனையில் உதவியாளராக வேலை செய்து வந்தார்.

கணவன், மனைவி தங்களது திருமண வாழ்க்கையை சந்தோசமாக நடத்தி வந்தனர். அந்த சமயத்தில் ஹேமா தனக்கு ஒரு புதிய செல்போன் வாங்கி தருமாறு கணவரிடம் கேட்டார். அவரும் ஆசை ஆசையாக மனைவிக்கு செல்போன் ஒன்றை வாங்கி கொடுத்தார். இதையடுத்து ஹேமா செல்போனில் அடிக்கடி பேச தொடங்கியுள்ளார். மேலும் அவர் செல்போனிலே மூழ்கி விட்டார். இதன்பின்பு அவர்களுடைய வாழ்க்கையில் பிரச்சினை ஏற்பட தொடங்கியது.

கவின்குமார் தனது மனைவியிடம் தொடர்ந்து செல்போனில் பேசிக்கொண்ட இருக்ககூடாது என அறிவுரை கூறினார். ஆனாலும் அவர் கணவனின் பேச்சை கேட்கவில்லை. எதற்காக செல்போன் வாங்கி கொடுத்தோம் என தன்னையே நொந்து கொள்ளும் நிலைமைக்கு கவின்குமார் தள்ளப்பட்டார். அவர் இந்த பிரச்சினை தொடராமல் இருக்க ஹேமாவின் பெற்றோரிடம் தெரிவித்து மனைவியை கண்டிக்குமாறு கூறினார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் கவின்குமார் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் ஹேமா மட்டும் தனியாக இருந்தார். அப்போது அவரிடம் அங்கு வந்த அவருடைய அண்ணன் செல்போனில் தேவையில்லாமல் பேசுவதை நிறுத்துமாறும், கணவனுடன் தகராறு செய்யாமல் இருக்குமாறும் அறிவுரை கூறிவிட்டு சென்றார்.

வேலை முடித்துவிட்டு இரவு 8 மணியளவில் கவின்குமார் வீட்டிற்கு வந்தார். அப்போது ஹேமா வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதைப்பார்த்து கவின்குமார் கண்ணீர் விட்டு கதறி அழுதார். இதுதொடர்பாக குமாரபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் ஹேமாவிற்கு திருமணமாகி 6 மாதமே ஆவதால் திருச்செங்கோடு உதவி கலெக்டர் மணிராஜ் விசாரணை மேற்கொண்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story