எத்தனை சாலைகளில் பராமரிப்பு பணி நடந்துள்ளது? மாநகராட்சி ஆணையர் விளக்கம் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
கடந்த 6 மாதத்தில் சென்னையில் எத்தனை சாலைகளில் பராமரிப்பு பணி நடந்துள்ளது? என்று மாநகராட்சி ஆணையர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
சென்னை ஐகோர்ட்டில், முரளி என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘பெருங்களத்தூர் பகுதியில் பழுதடைந்த சாலைகள் முறையாக பராமரிக்கவில்லை. விதிகளுக்கு எதிராக சாலைக்கு மேல் சாலை போட்டதால், பல இடங்களில் வீடுகளை விட சாலை உயரமாகிவிட்டது. வீடுகள் பள்ளத்துக்குள் கிடக்கிறது. இதனால், வீட்டின் கதவை கூட திறக்க முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். மழைக்காலங்களில் தண்ணீர் வீட்டுக்குள் வந்து விடுகிறது. எனவே, சாலைக்கு மேல் சாலையை போடாமல், பள்ளம் தோண்டி புதிய சாலையை முறைப்படி அமைக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
வரிப்பணம் வீணடிப்பு
அப்போது நெடுஞ்சாலைத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், ‘மெட்ரோ ரெயில் பணிகளால் சேதமான சாலைகள் மீண்டும் போடப்பட்டது’ என்று கூறப்பட்டது. அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘இந்த ஐகோர்ட்டுக்கு தவறான தகவல் அளித்தால், கோர்ட்டு அவமதிப்பு சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க நேரிடும்.
சாலைகளில் தினமும் பள்ளம் தோண்டப்படுகிறது. பின்னர் மூடப்படுகிறது. இதனால் ஏற்பட்டுள்ள பள்ளத்தில் வாகனங்கள் விழுந்து விபத்துகள் நடக்கிறது. உயிர் பலி ஏற்படுகிறது. சாலைகள் எதற்காக தோண்டப்படுகிறது? சாலை பராமரிப்பு என்ற பெயரில் மக்களின் வரிப்பணம் வீண் அடிக்கப்படுகிறது.
எனவே, சென்னை மாநகரத்தில் கடந்த 6 மாதங்களில் எத்தனை சாலைகளில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது? என்பது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். விசாரணையை வருகிற ஜூலை 1-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம்’ என்று உத்தரவிட்டனர்.
Related Tags :
Next Story