மும்பையில் கடந்த ஒரு ஆண்டில் 61 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் மாநகராட்சி தகவல்


மும்பையில் கடந்த ஒரு ஆண்டில் 61 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் மாநகராட்சி தகவல்
x
தினத்தந்தி 28 Jun 2019 4:12 AM IST (Updated: 28 Jun 2019 4:12 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில் கடந்த ஒரு ஆண்டில் 61 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக மாநகராட்சி தெரிவித்து உள்ளது.

மும்பை,

மராட்டிய அரசு சுற்றுச் சூழலை பாதுகாக்கும் நடவடிக்கையாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் மாநிலத்தில் பிளாஸ்டிக் பைகள், டம்ளர்கள், கரண்டிகள் என பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பல பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்தது.

ஆனால் மாநில தலைநகர் மும்பையில் பெயரளவிலேயே பிளாஸ்டிக் தடை அமலில் இருக்கிறது.

இறைச்சிக்கடைகளில் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் புழக்கத்தில் இருப்பதை பார்க்க முடிகிறது. மார்க்கெட்டுகளிலும் மக்கள் காய்கறிகளை பாலித்தீன் பைகளில் வாங்கி செல்கிறார்கள்.

ரூ.3.47 கோடி அபராதம் வசூல்

பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை அமலில் உள்ள கடந்த ஒரு ஆண்டில் மட்டும் மும்பையில் 61 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக மாநகராட்சி தெரிவித்து உள்ளது.

இதில் 28 டன் பிளாஸ்டிக் பொருட்கள் தடை அமலுக்கு வந்த முதல் 4 மாதங்களில் பறிமுதல் செய்யப்பட்டவை ஆகும்.

மேலும் அபராதமாக ரூ.3 கோடியே 47 லட்சம் வசூலிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் ரூ.2 கோடியே 36 லட்சம் கடைக்காரர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்டது ஆகும்.

Next Story