2 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட, விருதுநகருக்கான தாமிரபரணி குடிநீர் திட்டம் மதிப்பீட்டு நிலையிலேயே முடங்கியது ஏன்?
விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டைக்கான கூடுதல் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் 2 ஆண்டுகளுக்கு முன்பே முதல்-அமைச்சரால் அறிவிக்கப்பட்ட போதிலும், தற்போது மதிப்பீட்டு நிலையிலேயே முடங்கி உள்ளதால் இந்த திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
விருதுநகர்,
விருதுநகர், அருப்புக்கோட்டை நகராட்சி பகுதிக்கு தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் வல்லநாட்டில் இருந்து குடிநீர் கிடைத்து வருகிறது. ஆனாலும் இந்த நகராட்சி பகுதிக்கு குடிநீர் தேவை அதிகம் உள்ளதால் கூடுதல் கூட்டுக்குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு சிவகாசியில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவின் போது விருதுநகர், அருப்புக்கோட்டை நகருக்கான கூடுதல் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இதற்கான நடவடிக்கைகளை குடிநீர் வடிகால் வாரியம் மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் குடிநீர் வடிகால் வாரியம் ரூ.438 கோடி மதிப்பீட்டில் இத்திட்டத்தினை செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சாத்தூர் ராமச்சந்திரனும், தங்கம் தென்னரசும் தெரிவித்தனர்.
ஆனாலும் இந்த திட்டப்பணி தொடங்குவதற்கான அறிகுறி ஏதும் தென்பட வில்லை. இந்த நிலையில் தற்போது நிலவும் குடிநீர் பிரச்சினை குறித்து நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொள்ள வந்த இம்மாவட்ட கண்காணிப்பு அதிகாரி அரசு முதன்மை செயலாளர் கிருஷ்ணன் விருதுநகர், அருப்புக்கோட்டை பகுதிக்கு சீவலப்பேரியில் இருந்து தாமிரபரணி கூட்டுக்குடிநீர்திட்டம் செயல்படுத்தப்படுவதாக தெரிவித்தார். முதல்-அமைச்சர் அறிவித்து 2 ஆண்டுகள் ஆகியும் தற்போது ரூ.472 கோடி மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்த முதன்மை செயலாளர் இத்திட்டத்தின் மூலம் கிடைக்கும் தண்ணீரை சேமித்து வைத்து பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறியதுடன், இதற்கான நிதி ஆதாரத்தை பெறுவதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
அருப்புக்கோட்டை நகராட்சி பகுதியில் கடும் குடிநீர் பிரச்சினை உள்ளது. விருதுநகரில் 15 நாட்களுக்கு ஒரு முறையே குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இருந்த போதிலும் இந்த நகராட்சி பகுதிகளுக்கான குடிநீர் திட்டப் பணிகள் தொடங்கப்படாமல் நிதி ஆதாதாரத்தை பெறுவதற்காக முடங்கிய நிலையில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மக்களுக்கு அடிப்படை தேவையாக உள்ள குடிநீர் திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து நிறைவேற்றப்பட வேண்டிய நிலையில் இம்மாவட்டத்தில் கிராமப்பகுதிகளுக்காக கடந்த 2010-ம் ஆண்டு தொடங்கப்பட்ட தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் இன்னும் 732 கிராமப்பகுதிகளுக்கு கிடைக்காத நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகாசி, திருத்தங்கல் நகராட்சி பகுதிக்கான கூடுதல் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டமும் 49 சதவீதம் தான் முடிந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று விருதுநகர், அருப்புக்கோட்டை நகராட்சி பகுதிக்கான கூடுதல் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டப்பணியும் நிதி ஆதாரத்துக்காக முடங்கி உள்ள நிலையில் திட்டப்பணி எப்போது தொடங்கப்பட்டு முடிவடைந்து பயன்பாட்டிற்கு வரும் என்று தெரியாத நிலையே நீடிக்கிறது. குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் குடிநீர் திட்டப்பணிகளை விரைவில் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அக்கறை காட்டாத நிலை ஏன் நீடிக்கிறது என்பது தெரியவில்லை.
தற்போது தமிழக அரசு மாநிலம் முழுவதும் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்காக கூட்டுக்குடிநீர் திட்டங்களை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுத்துவரும் நிலையில் விருதுநகர், அருப்புக்கோட்டை நகராட்சிக்கான கூடுதல் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்துக்கும் உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து திட்டப்பணியை விரைவு படுத்த உத்தரவிடவேண்டும் என கோரப்பட்டுள்ளது. மாவட்ட கண்காணிப்பு அதிகாரியும் மாவட்ட நிர்வாகமும் இதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.
Related Tags :
Next Story