வாரிசு அடிப்படையில் பட்டா மாற்ற உடனடி நடவடிக்கை - கலெக்டர் தகவல்


வாரிசு அடிப்படையில் பட்டா மாற்ற உடனடி நடவடிக்கை - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 27 Jun 2019 10:30 PM GMT (Updated: 28 Jun 2019 12:06 AM GMT)

வாரிசு அடிப்படையில் பட்டா மாற்றுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்தார்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் வேளாண்மைத்துறை மூலம் 2018-19-ம் ஆண்டு கூட்டு பண்ணைய திட்டம் சார்பில் 52 உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுவுடன் ஆலோசனை கூட்டம் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வேளாண்மை இணை இயக்குனர்(பொறுப்பு) இளங்கோவன் முன்னிலை வகித்தார். விழாவில் உழவர் உற்பத்தியாளர் குழு உறுப்பினர்களுக்கு தொழில் நுட்ப கையேடுகளை வழங்கி கலெக்டர் ஜெயகாந்தன் பேசியதாவது:- சிவகங்கை மாவட்டத்தில் வேளாண்மைத்துறை சார்பில் 2018-19-ம் ஆண்டு கூட்டு பண்ணைய திட்டம் மூலம் 52 உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்களுக்கு அரசு வழங்கிய தொகுப்பு நிதியாக ரூ.2 கோடியே 60 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தி நிதியின் மூலம் 139 பண்ணை எந்திரங்கள் வழங்கப்பட்டு தற்போது அவை பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது பெய்யும் குறைந்த மழையை பயன்படுத்தி பயிர் செய்ய வசதியாக கண்மாய்கள், வரத்துக் கால்வாய்கள் ஆகியவை தூர்வாரப்படுகிறது. இதை அந்தந்த பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும் உழவர் உற்பத்தியாளர் குழுவைச் சேர்ந்த அனைத்து உறுப்பினர்களும் பண்ணை எந்திரங்களை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும்.

மேலும் குத்தகைக்கு விடப்படும் தொகையை கொண்டு கூட்டுக் கொள்முதல் மற்றும் கூட்டுப் பண்ணையம் செய்ய தேவையான பணிகளுக்காக பயன்படுத்த வேண்டும். மேலும் விவசாயிகள் அளிக்கும் புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பிரதம மந்திரி கிஷான் திட்டம் மூலம் அனைத்து விவசாயிகளும் பயனடையலாம்.வாரிசு அடிப்படையில் பட்டா மாற்றுவதற்கு அளிக்கப்படும் கோரிக்கைகள் உடனடியாக பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.விழாவில் சிவகங்கை வேளாண்மை துணை இயக்குனர் சசிகலா, வேளாண்மை துணை இயக்குனர்(தோட்டக்கலைத்துறை) ராஜேந்திரன், வேளாண்மை துணை இயக்குனர் (வேளாண் வணிகம் மற்றும் விற்பனை) வெங்கடேஷ்வரன், மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் கணேசன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சர்மிளா, வேளாண்மை அலுவலர் முருகபாரதி மற்றும் அனைத்து வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்கள், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர்கள், வேளாண்மை அலுவலர்கள், தோட்டக்கலைத்துறை அலுவலர்கள், உதவி வேளாண்மை அலுவலர்கள், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த உழவர் உற்பத்தியாளர் குழுக்களின் தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள் மற்றும் முன்னோடி விவசாயிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முடிவில் வேளாண்மை அலுவலர் பரமேஸ்வரன் நன்றி கூறினார்.

Next Story