அந்தியூர் அருகே நாட்டுத்துப்பாக்கி பதுக்கி வைத்திருந்த 2 பேர் கைது
அந்தியூர் அருகே நாட்டுத்துப்பாக்கி பதுக்கி வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
அந்தியூர்,
ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனப்பகுதியில் நாட்டுத்துப்பாக்கிகள் மூலம் வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவல் கிடைத்ததும் நாட்டுத்துப்பாக்கிகள் வைத்து வனவிலங்குகளை வேட்டையாடுபவர்களை பிடிக்க அந்தியூர் போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் உத்தரவிட்டார். மேலும் இதற்காக போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் அந்தியூர் பகுதியில் நாட்டுத்துப்பாக்கிகள் பதுக்கி வைத்து பயன்படுத்தி வருபவர்களை கண்டறிந்து கைது செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் அந்தியூர் அருகே உள்ள வட்டக்காடு பகுதியில் நாட்டுத்துப்பாக்கிகள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக தனிப்படையினருக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்ததும் தனிப்படை போலீசார் வட்டக்காடு சின்னச்சாமி தோட்டம் பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த பழனிச்சாமி (வயது 57) என்பவர் அவருடைய தோட்டத்தில் நாட்டுத்துப்பாக்கி பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து பழனிச்சாமியை கைது செய்ததுடன், அவரிடம் இருந்த நாட்டுத்துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் வட்டக்காடு கும்பிரவாணி மாரியம்மன் கோவில் தோட்டம் பகுதியை சேர்ந்த சவுந்தரராஜன் (45) என்பவர் நாட்டுத்துப்பாக்கி பதுக்கி வைத்திருந்தையும் கண்டுபிடித்து அவரையும் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த நாட்டுத்துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி 2 பேரிடம் இருந்து நாட்டுத்துப்பாக்கிக்கு பயன்படுத்தும் வெடிமருந்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அந்தியூர் பகுதியில் 6 நாட்டுத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதுடன், 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இவர்களுக்கு நாட்டுத்துப்பாக்கி தயாரித்து கொடுத்ததாக அந்த பகுதியை சேர்ந்த தச்சு தொழிலாளி ஒருவரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.
–