கோபி அருகே வீடு புகுந்து 6½ பவுன் நகை திருட்டு

கோபி அருகே வீடு புகுந்து 6½ பவுன் நகையை திருடிச்சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கடத்தூர்,
கோபி அருகே உள்ள காசிபாளையம் காந்திநகரை சேர்ந்தவர் செல்லப்பன் (வயது 65). விவசாயி. இவர் தனது குடும்பத்துடன் அலிங்கியத்துக்காரர் தோட்டத்து வீட்டில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று இரவு செல்லப்பனும், அவருடைய மனைவியும் காற்றோட்டத்துக்காக வீட்டு வராண்டாவில் படுத்து தூங்கி கொண்டிருந்தனர்.
செல்லப்பனின் மனைவி தனது தாலிச்சங்கிலியை கழற்றி அருகே உள்ள மேஜை மீது வைத்திருந்தார். இதை நோட்டமிட்ட மர்மநபர் ஒருவர் சிறிது நேரத்தில் செல்லப்பன் வீட்டுக்குள் நைசாக புகுந்தார். அப்போது சத்தம் கேட்டு கணவனும் மனைவியும் திடுக்கிட்டு எழுந்து பார்த்தனர். உடனே ‘‘திருடன் திருடன்’’ என்று சத்தம் போட்டனர்.
இதற்கிடையே மர்மநபர் மேஜையில் இருந்த 7½ பவுன் தாலிச்சங்கிலியை திருடிக்கொண்டு ஓடினார். அப்போது தாலிசங்கிலியில் இருந்த 1 பவுன் மாங்கல்யம் கீழே விழுந்தது. 6½ பவுன் நகையுடன் மர்மநபர் அங்கிருந்து தப்பிஓடி விட்டார்.
இதுகுறித்து செல்லப்பன் கடத்தூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து நகையை திருடிச்சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.