சிவகிரி பகுதியில் தண்ணீர் தொட்டியில் குடங்களை கட்டி பொதுமக்கள் நூதன போராட்டம்
சிவகிரி அருகே குடிநீர் சீராக வினியோகம் செய்யக்கோரி தண்ணீர் தொட்டியில் குடங்களை கட்டி பொதுமக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகிரி,
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள அஞ்சூர் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதி எம்.ஜி.ஆர். நகர். இந்த பகுதியில் 100–க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ளவர்களுக்கு 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டு அதன் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இதற்காக அந்த பகுதியில் கடந்த 2013–ம் ஆண்டு ரூ.9 லட்சத்து 98 ஆயிரம் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. கடந்த 3 மாதங்களுக்கு இங்குள்ளவர்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் குடிநீர் சீராக வினியோகம் செய்யக்கோரி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்குள்ள மேல்நிலை தண்ணீர் தொட்டியில் கயிற்றில் பிளாஸ்டிக் குடங்களை கட்டி தொங்கவிட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், ‘கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இங்குள்ள ஆழ்குழாய் கிணற்றில் உள்ள மின் மோட்டாரில் பழுது ஏற்பட்டது. இதுவரை பழுது நீக்கப்படவில்லை. இதனால் எங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. மேலும் 20 நாட்களுக்கு ஒரு முறை காவிரி ஆற்றுக்குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதைத்தான் நாங்கள் பயன்படுத்தி வருகிறோம். இந்த தண்ணீர் எங்களுக்கு போதுமானதாக இல்லை.
எனவே நாங்கள் பல்வேறு இடங்களுக்கு நடந்து சென்றும், சைக்கிளில் சென்றும் தேவையான தண்ணீர் பிடித்து வருகிறோம். இதனால் நாங்கள் வேலைக்கு சரியாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே எங்கள் பகுதிக்கு குடிநீர் சீராக வினியோகம் செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தோம். ஆனால் எந்த பயனும் இல்லை. எனவே எங்கள் நிலையை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தும் வகையில் மேல் நிலை குடிநீர் தொட்டியில் கயிற்றில் பிளாஸ்டிக் குடங்களை கட்டி தொங்கவிட்டுள்ளோம்,’ என்றனர்.