ஆத்தூர் அருகே பயங்கரம்: அரிசி ஆலை உரிமையாளர் அடித்துக்கொலை சொத்து தகராறில் மனைவி, மகன் வெறிச்செயல்
ஆத்தூர் அருகே சொத்தை பிரித்து தராததால் அரிசி ஆலை உரிமையாளரை அடித்துக் கொன்ற மனைவி, மகனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஆத்தூர்,
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ராமநாயக்கன் பாளையம் ஊராட்சி 10 ஏக்கர் காலனி காராமணி திட்டு பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 58). விவசாயியான இவர் வீட்டின் அருகே சிறிய அளவில் அரிசி ஆலை நடத்தி வந்தார். இவருக்கு சொந்தமாக 3 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இவருடைய மனைவி இன்பவள்ளி (48). இவர்களுக்கு லோகநாதன் (32) என்ற மகனும், சத்யா என்ற மகளும் உள்ளனர்.
லோகநாதனுக்கு கவிதா என்ற மனைவியும், இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மாரிமுத்து தனது மகன் லோகநாதனுக்கு ஒரு ஏக்கர் நிலம் மட்டும் எழுதிக் கொடுத்துள்ளார். இதில் விவசாயம் செய்து தனக்கு போதிய லாபம் இல்லாததால் அடிக்கடி தந்தையுடன் தகராறு செய்து வந்துள்ளார். மேலும் மாரிமுத்துவுக்கும் மனைவி இன்ப வள்ளிக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது.
அதேநேரத்தில் அரிசி ஆலையில் வரும் வருமானம் மற்றும் 2 ஏக்கர் நிலத்தில் பயிர் செய்வதன் மூலம் கிடைக்கும் வருமானம் ஆகியவற்றை மாரிமுத்து மதுகுடித்து தாராளமாக செலவு செய்து வந்ததாக கூறி மனைவியும், மகனும் அவரிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மாரிமுத்துவிடம் லோகநாதன் தனக்கு அரிசி ஆலையை தர வேண்டும் அல்லது இரண்டு ஏக்கர் நிலம் தர வேண்டும் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அப்போது அங்கிருந்த இன்பவள்ளியும், மகன் லோகநாதனுடன் சேர்ந்து மாரிமுத்துவிடம் தகராறு செய்தார். இந்த தகராறு முற்றியதில் இன்பவள்ளியும், லோகநாதனும் சேர்ந்து மண்வெட்டி கம்பால் மாரிமுத்துவை அடித்ததுடன், கல்லால் தாக்கினர். இதில் தலையில் பலத்த காயமடைந்த மாரிமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் லோகநாதனும், அவருடைய மனைவி இன்பவள்ளியும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதனிடையே நேற்று காலையில் மாரிமுத்துவின் வீடு நீண்ட நேரமாக பூட்டி கிடப்பதை கண்டு அப்பகுதியில் வசிக்கும் அக்கம்பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது ரத்த வெள்ளத்தில் மாரிமுத்து கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் ஆத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், ஆத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜூ, ஆத்தூர் புறநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் விரைந்து சென்று அரிசி ஆலை உரிமையாளரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த பயங்கர கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரிமுத்துவின் மனைவி இன்பவள்ளி, மகன் லோகநாதன் ஆகிய இருவரையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.
சொத்தை பிரித்து தராததால் அரிசி ஆலை உரிமையாளரை மனைவியும், மகனும் அடித்துக் கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.