ராசிபுரம் அருகே பெண்கள் சாலை மறியல்
ராசிபுரம் அருகே 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் பணி வழங்கக்கோரி பெண்கள் சாலைமறியல் செய்தனர்.
ராசிபுரம்,
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது பட்டணம் முனியப்பம்பாளையம் ஊராட்சி. இங்குள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் சிறப்பு கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது. இதில் கிராம ஊர்நல அலுவலர் கமலம் கலந்து கொண்டார். ஊராட்சி மன்ற செயலாளர் பச்சமுத்து முன்னிலை வகித்தார்.
இந்த கூட்டத்தில், பொதுமக்கள் கலந்து கொண்டனர். அப்போது அங்கு 100-க்கும் மேற்பட்டவர்கள் வந்தனர். அப்போது ஊராட்சி செயலாளர் பச்சமுத்துவிடம் கிராம சபை கூட்டம் நடைபெறுவது பற்றி தங்களுக்கு தகவல் தரவில்லை என்று குற்றம் சாட்டினர்.
மேலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் (100 நாள் வேலை திட்டம்) குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் வேலை வழங்கப்படுகிறது, எனவே, அனைவருக்கும் வேலை வாய்ப்பு தரவேண்டும் என்று கேட்டனர். அதற்கு ஊராட்சி செயலாளர் பச்சமுத்து பதில் அளித்தார்.
ஆனால் அவரது பதிலில் திருப்தி அடையாத பெண்கள் 100 நாள் வேலை உறுதி திட்டத்தின் முன்னாள் மக்கள் நலப்பொறுப்பாளர் தட்சிணாமூர்த்தி தலைமையில் 100-க்கும் மேற்பட்டவர்கள் பட்டணம் முனியப்பம்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே திடீரென்று சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இதனால் ராசிபுரம்- புதுப்பட்டி சாலையில் 45 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.
இது பற்றி தகவல் அறிந்ததும் நாமகிரிபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்து சென்று 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் வேலை வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.
Related Tags :
Next Story