தொழில் வணிக கண்காட்சி கலெக்டர் பிரபாகர் தொடங்கி வைத்தார்


தொழில் வணிக கண்காட்சி கலெக்டர் பிரபாகர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 29 Jun 2019 4:30 AM IST (Updated: 28 Jun 2019 9:46 PM IST)
t-max-icont-min-icon

ஓசூரில் ஹோஸ்டியா தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற தொழில் வணிக கண்காட்சியை கலெக்டர் பிரபாகர் தொடங்கி வைத்தார்.

ஓசூர்,

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், ஹோஸ்டியா தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் 5-வது (ஹோஸ்டிக்-2019) தொழில் வணிக கண்காட்சி ஓசூர் சிப்காட் வளாகத்தில் சென்னை சில்க்ஸ் அருகே அமைக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் நேற்று தொடங்கி வைத்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் முன்னிலை வகித்தார். ஓசூர் ஹோஸ்டியா சங்க தலைவர் கே.வேல்முருகன் வரவேற்றார்.

நிகழ்ச்சியில், கலெக்டர் பிரபாகர் பேசியதாவது:-

ஹோஸ்டியா தொழில் கூட்டமைப்பு சார்பில் பல நிறுவனங்களை ஒருங்கிணைத்து இந்த 5-வது தொழில் வணிக கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. ஓசூர் மாநகராட்சியானது, வளர்ந்து வரும் தொழில் நகரமாக விளங்குவதுடன் பல்வேறு தொழில் அமைப்புகளுக்கு வழிகாட்டியாகவும், பயிற்சிகள் வழங்கியும் ஊக்குவித்து வருகிறது. தமிழக முதல்-அமைச்சரின் உத்தரவிற்கிணங்க சூளகிரி பகுதியில் சிப்காட் 3 மற்றும் சிப்காட்-4 அமைக்க நில எடுப்பு பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. தொழில் வளர்ச்சியை கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் சாலை வசதிகளை மேம்படுத்தவும், ஓசூர் முதல் கிரு‌‌ஷ்ணகிரி வரை 13 இடங்களில் உயர் மேம்பாலங்கள் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இந்தாண்டு ரூ.305 கோடி மதிப்பில் துணை மின் நிலையங்கள் அமைக்க தமிழக முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். தொழில் நிறுவனங்களுக்கு தடையின்றி மின்சாரம் சிடைக்க கூடுதலாக 400 கிவோ துணை மின் நிலையங்கள் அமைக்க இடங்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. இதுபோன்ற துணை மின் நிலையங்கள் அமைக்கும்போது, பல்வேறு தொழில் நிறுவனங்கள் ஓசூர் பகுதியில் அமைய வாய்ப்புள்ளது. இதனால் வேலை வாய்ப்பு அதிகரித்து மக்களின் வாழ்க்கை தரம் உயர வாய்ப்புள்ளது. மேலும் தொழில் கட்டுமான வசதிகளை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம், தொழிற் நிறுவனங்கள் வளர்ச்சி அடைவதற்கு இந்த தொழில் கண்காட்சி பயனுள்ளதாக அமையும். போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, ஓசூர் பஸ் நிலையத்திற்கு 12 ஏக்கரில் புதிய பஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொழிற்சாலை பகுதிகளில். 1 மாத காலத்திற்குள் மின் விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் ஓசூர் பகுதிக்கு 22 எம்.எல்.டி. தண்ணீர் தேவையாக உள்ளது. தற்போது 18 எம்.எல்.டி. தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. எனவே இந்த தொழில் கூட்டமைப்புக்கு தேவையான அனைத்து உதவிகளை செய்ய மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது‘. இவ்வாறு விழாவில் கலெக்டர் பேசினார்.

முன்னதாக அவர் 5-வது தொழில் வணிக கண்காட்சியின் கையேட்டை வெளியிட்டு, தொழில் நிறுவன அரங்குகளை பார்வையிட்டார். மேலும் இதில், ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மீனாட்சி, டான்ஸ்டியா தலைவர் அன்பரசன், தொழிற் வணிக துறை பொது மேலாளர் பிரசன்னா பாலமுருகன், சிட்பி பொது மேலாளர் கண்ணன், ஹோஸ்டியா முன்னாள் தலைவர் ஞானசேகரன், பொருளாளர் ஸ்ரீதரன், டைட்டான் நிறுவன முதன்மை மேலாளர் ராஜகோபாலன், ஹோஸ்மி தலைவர் நம்பி, அலுபி டைக்காஸ்ட் தலைவர் வீரராகவன் மற்றும் தொழிற் நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். முடிவில் ஹோஸ்டியா செயலாளர் வடிவேலு நன்றி கூறினார்.

பின்னர், ஹோஸ்டியா தலைவர் வேல்முருகன் நிருபர்களிடம் கூறுகையில், இந்த தொழில் வணிக கண்காட்சியில், 135 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் எல்லாவிதமான உற்பத்தியாளர்களும் இங்கு வந்துள்ளனர். ஓசூரில், நிரந்தர கண்காட்சி மையம் ஒன்றை அரசு அமைத்து தர வேண்டும். இதனால் தொடர்ச்சியாக ஆண்டுக்கு 3, 4 தொழில் வணிக கண்காட்சியை அமைத்து மாவட்டத்தில் பெருமளவில் தொழில் வளர்ச்சி பெருக வாய்ப்பாக அமையும். மேலும் அருகில் உள்ள கிரு‌‌ஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களை சேர்ந்த படித்த இளைஞர்களுக்கு அதிகளவில் வேலை வாய்ப்பு கிடைக்கவும், இந்த தொழில் வணிக கண்காட்சி மையம் உதவும். இந்த தொழில் வணிக கண்காட்சி மூலம் சுமார் 120 கோடி ரூபாய் அளவில் வர்த்தகம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை நடைபெறவுள்ள இந்த கண்காட்சிக்கு, பொதுமக்கள், மாணவர்கள், தொழில் முனைவோர்கள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பு மக்களும் வந்து பார்வையிடலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story