கிரு‌‌ஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ரூ.12 லட்சத்தில் `ரோபோடிக்ஸ்' ஆய்வகம்


கிரு‌‌ஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ரூ.12 லட்சத்தில் `ரோபோடிக்ஸ் ஆய்வகம்
x
தினத்தந்தி 29 Jun 2019 3:45 AM IST (Updated: 28 Jun 2019 9:49 PM IST)
t-max-icont-min-icon

கிரு‌‌ஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ரூ.12 லட்சம் மதிப்பில் ரோபோடிக்ஸ் ஆய்வகத்தை மாவட்ட வருவாய் சாந்தி தொடங்கி வைத்தார்.

கிரு‌‌ஷ்ணகிரி,

கிரு‌‌ஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் அடல் புத்தாக்க திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சம் மதிப்பில் ரோபோடிக்ஸ் ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வகம் திறப்பு விழா நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமை தாங்கினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் மகேந்திரன் வரவேற்றார். உதவி திட்ட அலுவலர்கள் சூசைநாதன், நாராயணா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, நவீன ரோபோடிக்ஸ் ஆய்வகத்தை திறந்து வைத்து மாணவிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார். இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி கூறியதாவது:-பிரதமரின் தலைமையின் கீழ் இயங்கும் நிதி ஆயோக், பள்ளி மாணவர்களின் படைப்பாற்றலை ஊக்குவித்து, அன்றாட பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதற்காகன அடல் புத்தாக்க திட்டத்தின் கீழ் அடல் மேம்படுத்து ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி கடந்த 2018-ம் ஆண்டு இத்திட்டத்தின் கீழ் கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டத்தில் 5 பள்ளிகள், மத்திய அரசால் தேர்வு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் முழுமையாக செய்து, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி முதன்மை பள்ளியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி 2018-19-ம் கல்வியாண்டில் இந்த ஆய்வகம் அமைக்க ரூ.12 லட்சம் நிதி பெறப்பட்டுள்ளது. இதில், ரூ.10 லட்சம் ஆய்வகம் அமைக்கவும், ரூ.2 லட்சம் செயல்பாட்டு கட்டணத்திற்கு பயன்படுகிறது. இந்த ஆய்வகத்தில் ரோபோடிக்ஸ், சென்சார்கள், 3 அடி அச்சுபொறி, கணினிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வகத்தை பயன்படுத்தி மாணவர்கள் ரோபோடிக்ஸ் துறையில் தங்களது தனித்திறனைகளை வளர்த்துக் கொள்ளலாம்.

மாணவர்கள் தாங்கள் கற்ற கல்வி மற்றும் கற்பனைத் திறனை கொண்டு பல பயனுள்ள பொருட்களை உருவாக்க ஆய்வகம் பயன்படுகிறது. ஆய்வகத்தில் 3 டி அச்சுபொறி, நமக்கு தேவையான பொருட்களை கணினில் வடிவமைத்து முப்பரிமாணத்தில் அசல் போலயே பிரிண்ட் எடுக்க முடியும். மேலும், மின்னணு சாதனங்கள் தொலைவில் இருந்தே கட்டுப்படுத்தக் கூடிய ஐஓடி தொழில்நுட்பம் வசதியும் உள்ளதால், மாணவர்கள் நிபுணத்துவம் பெற ஆய்வகம் உதவும். தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ள இதுபோன்ற ரோபோடிக்ஸ் ஆய்வகம் அரசு பள்ளிகள் மேம்பாட்டு வருவதை காட்டுகிறது. அரசு பள்ளிகளில் தரமான கல்வி கட்டாயம் மாணவ, மாணவிகளுக்கு கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் ராஜா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வெங்கடாசலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story