கிருஷ்ணகிரி அணையை தூர்வார வேண்டும் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
கிருஷ்ணகிரி அணையை தூர்வார வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் பிரபாகர் தலைமையில் நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-
கிருஷ்ணகிரி அணையில் மதகுகள் பழுதால் கடந்த 2 ஆண்டுகளாக 42 அடிக்கு தான் தண்ணீர் தேக்கப்பட்டு வருகின்றன. இந்த வாய்ப்பை பயன்படுத்த கிருஷ்ணகிரி அணையை தூர்வாரும் பணிகள் தொடங்க வேண்டும். இதே போல் மாவட்டத்தில் வறண்டு காணப்படும் ஏரிகள், குளங்கள், குட்டைகள், நீர்வரத்து கால்வாய்களை தூர்வாரி வண்டல் மண்ணை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். வேளாண் எந்திரங்களான பவர் டிரில்லர், டிராக்டர் உள்ளிட்ட கருவிகள் மானியத்துடன் விவசாயிகள் வாங்க நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
காட்டுப்பன்றி, யானைகளால் கடந்த 6 மாதங்களாக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை வனத்துறையினர் வழங்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். குரங்குகளால் தென்னை மரங்களில் காய்கள் சேதமாகி வருவதால், ஒவ்வொரு தென்னை மரத்திற்கு ரூ.ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். நீர்நிலைகளில் பயனுள்ள மரங்களை நடவு செய்ய வேண்டும்.
வறட்சியால் விவசாயிகள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வரும்நிலையில், வங்கிகள் கடனை திருப்பி செலுத்த கடும் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். மழை பொழிந்து விவசாய பணிகள் தொடங்கும் வரை கடன் வசூல் கெடுபிடிகளை தளர்த்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
தொடர்ந்து கலெக்டர் பிரபாகர் பேசியதாவது:-
நீர்நிலைகள் தூர்வாரும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விவசாயிகள் தங்களது பகுதியில் ஏரிகளில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ள முன்வந்தால், சம்பந்தப்பட்ட ஏரியில் எந்த அளவிற்கு வண்டல் எடுக்க வேண்டும் என்பதை பொறியாளர் மூலம் அளவீடு செய்து தரப்படும். மேலும், வண்டல் மண் விவசாயத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். வியாபாரம் ரீதியாக பயன்படுத்த கூடாது. இதே போல், ஒரே இடத்தில் ஆழமாக எடுத்துவிட்டு பிற இடங்களில் சமநிலையில் விடும் போது, மழை பொழிவு ஏற்பட்டு ஏரியில் தண்ணீர் தேங்கும். இதனால் அசம்பாவிதங்கள் ஏற்படும். ஏரியில் வண்டல் மண் ஒரே சீராக எடுக்க வேண்டும். 75 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்ய தயார் நிலையில் உள்ளது. விவசாயிகள் தங்களது விளைநிலங்கள், நீர்நிலைகளில் மரக்கன்றுகள் நடவு செய்து பராமரிக்க முன்வந்தால், உடனே மரக்கன்றுகள் நடவு செய்து தரப்படும்.
வனவிலங்குகள் ஏற்பட்ட பாதிப்புகள் இழப்பீடு வழங்க அரசுக்கு ரூ.1.5 கோடிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதில், முதற்கட்டமாக ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குடிநீர் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறோம். வடமங்கலம் ஏரி தூர்வாரும் பணிகள் மேற்கொள்வது தொடர்பான ஆய்வு அறிக்கை பொதுப்பணித்துறையினர் ஒரு வாரத்தில் சமர்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ராமகவுண்டர், மத்தூர் ஒன்றிய செயலாளர் ரவீந்தராசு மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story