காட்பாடியில் உள்ள சித்தூர் பஸ் நிறுத்தத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்


காட்பாடியில் உள்ள சித்தூர் பஸ் நிறுத்தத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x
தினத்தந்தி 28 Jun 2019 10:15 PM GMT (Updated: 28 Jun 2019 4:41 PM GMT)

காட்பாடியில் உள்ள சித்தூர் பஸ் நிறுத்தத்தில் மாநகராட்சி சார்பில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது. இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

காட்பாடி, 

காட்பாடியில் உள்ள சித்தூர் பஸ் நிறுத்தத்தில் கடை வைத்துள்ள சிலர் தங்கள் கடைக்கு முன்பு உள்ள பகுதிகளை ஆக்கிரமித்து கடை வைத்திருந்தனர். மேலும் ரோட்டிலேயே தங்கள் கடைகளின் விளம்பர பலகைகளையும் வைத்திருந்தனர். இதனால் கடைகளுக்கு வருபவர்கள் கடை முன்பு வாகனங்களை நிறுத்தும்போது போக்குவரத்து பாதிக்கப்பட்டு வந்தது.

இதனால் ஆக்கிரமிப்புகளை கடைக்காரர்களே அகற்றிக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு வந்தது. அதற்கு கால அவகாசம் கொடுத்தும் ஆக்கமிப்புகளை அகற்றிக் கொள்ளவில்லை. அதைத்தொடர்ந்து மாநகராட்சி சார்பில் ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்யப்பட்டது.

மாநகராட்சி முதலாவது மண்டல உதவி கமி‌‌ஷனர் மதிவாணன், சுகாதார அலுவலர் பாலமுருகன், நெடுஞ்சாலைத்துறை அதிகாரி குணசேகரன் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் பொக்லைன் எந்திரத்துடன் நேற்று காலை சித்தூர் பஸ்நிறுத்தத்திற்கு வந்தனர். காட்பாடி இன்ஸ்பெக்டர் புகழ் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

அங்கு கடைகள் முன்பு அமைக்கப்பட்டிருந்த நிழற்கூரைகள், பெயர் பலகைகள், விளம்பர பலகைகளை அகற்றினர். கடைகள் முன்பு நிறுத்தப்பட்டிருந்த சில இருசக்கர வாகனங்களையும் மாநகராட்சி ஊழியர்கள் லாரியில் ஏற்றிச்சென்றனர்.

கடைகள் முன்பு வைக்கப்பட்டிருந்த பெயர் பலகைகளை அகற்றியதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர்.

Next Story