தூத்துக்குடியில் பூ வியாபாரிகள் சாலை மறியல் போராட்டம்


தூத்துக்குடியில் பூ வியாபாரிகள் சாலை மறியல் போராட்டம்
x
தினத்தந்தி 29 Jun 2019 3:30 AM IST (Updated: 28 Jun 2019 10:24 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் பூ வியாபாரிகள் சாலையில் பச்சையை கொட்டி மறியல் போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி பூ மார்க்கெட்டுக்கு, உள்ளூர் பூ வியாபாரிகள் மற்றும் கோவில்பட்டி, நெல்லை போன்ற வெளியூர் பூ வியாபாரிகளும் தங்களின் பூக்களை விற்பனை செய்ய கொண்டு வருகிறார்கள். வெளியூர் பூ வியாபாரிகளால் தங்களின் விற்பனை பாதிக்கப்படுவதாக கூறி உள்ளூர் வியாபாரிகள் கடந்த 2 நாட்களாக தூத்துக்குடி பூ மார்க்கெட்டுக்கு பூக்கள் மற்றும் பச்சை கொண்டு வரவில்லை.

இந்த நிலையில் நேற்று காலையில் உள்ளூர் வியாபாரிகள் பச்சையை தூத்துக்குடி பூ மார்க்கெட்டுக்கு விற்பனை செய்ய கொண்டு வந்தனர். அப்போது பூ கமிஷன் உரிமையாளர்கள், எந்தவித முன் அறிவிப்பும் இன்றி கடந்த 2 நாட்களாக நீங்கள் பூக்களை இங்கு கொண்டு வரவில்லை. இதனால் இனி உங்கள் பூக்கள் மற்றும் பச்சையை நாங்கள் வாங்கி, இங்கு விற்பனை செய்ய போவது இல்லை என்று கூறினார்களாம்.

இதனால் ஆத்திரம் அடைந்த உள்ளூர் பூ வியாபாரிகள் தாங்கள் கொண்டு வந்த பூக்கள் மற்றும் பச்சையை பூ மார்க்கெட் முன்பு சாலையில் கொட்டி மறியல் போராட்டம் நடத்தினர். இதனை அறிந்த மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சீனியம்மாள், மத்தியபாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயசித்ரா, ஊர்காவல்பெருமாள் மற்றும் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் இது குறித்து மனு கொடுங்கள். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்ததையடுத்து, உள்ளூர் பூ வியாபாரிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த போராட்டத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story