ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கையில் தாலி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்


ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கையில் தாலி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
x
தினத்தந்தி 28 Jun 2019 11:00 PM GMT (Updated: 28 Jun 2019 5:14 PM GMT)

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கையில் தாலி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கீழப்பழுவூர், 

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்துக்கொண்டே வருகின்றனர். இந்நிலையில் அரியலூர் உள்பட பல்வேறு இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் செயல்பட போவதாக மத்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதற்கென அனுமதி கோரும் பணி ஓ.என்.ஜி.சி. நிறுவனம் தற்போது மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வெங்கனூர் அனைத்து கிராம விவசாயிகள் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கையில் தாலி ஏந்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

தாலி எப்படி ஒரு பெண்ணுக்கு திருமணமானவள் என்ற அங்கீகாரத்தை தருகிறதோ? அதை போன்றே விவசாயிகளுக்கு அங்கீகாரமே மலடாகாத மண் தான். இதனை வைத்து தான் விவசாயம் செய்ய முடியும். தாலி இல்லாத பெண்ணை விதவை என்பார்கள் அது போல ஹைட்ரோ கார்பன் எடுக்கப்பட்ட நிலம் வெறும் நிலமாக மட்டுமே இருக்கும். அப்படிப்பட்ட நிலத்தினால் யாருக்கும் எந்த பயனும் இல்லாமல் போய்விடும். எனவே தான் எங்களது மண்ணைக் காக்க தாலியுடன் போராட்டம் நடத்துகிறோம். மத்திய, மாநில அரசுகள் மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் திட்டங்களை ரத்து செய்து மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story