குளத்தில் மண் எடுத்து சென்ற லாரியை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியல் - திருவெண்காடு அருகே பரபரப்பு
திருவெண்காடு அருகே குளத்தில் மண் எடுத்து சென்ற லாரியை சிறை பிடித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
திருவெண்காடு,
நாகை மாவட்டம், திருவெண்காடு அருகே பாகசாலை கிராமத்தில் 5 ஏக்கர் பரப்பளவில் குளம் உள்ளது. இந்த குளம் அப்பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் ஆதாரமாக இருந்து வந்தது. இந்த நிலையில் குளத்தை தூர்வாருவதாக கூறி சிலர் சட்டத்திற்கு புறம்பாக, குளத்தில் அதிகளவு ஆழம் தோண்டி மண் எடுத்து லாரிகள் மூலம் வெளியூர்களுக்கு தினமும் விற்பனை செய்கின்றனர்.
இவ்வாறு மண் எடுப்பதால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. இதனால் பாகசாலை, கண்டமங்கலம் உள்ளிட்ட 5 கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தினமும் குடிநீர் தேடி அலைய வேண்டிய அவலநிலை உள்ளதாக மேற்கண்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். குளத்தில் மண் எடுப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் குளத்தில் மண் எடுத்து சென்ற லாரியை சிறை பிடித்து மக்கள் மசோதா கட்சியினர் மற்றும் கிராம மக்கள் திருவெண்காடு அருகே தொக்கலாக்குடி மெயின்ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது பாகசாலையில் உள்ள குளத்தில் மண் எடுப்பதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் வராததால் மாவட்ட கலெக்டரிடம் நேரில் சென்று மனு கொடுப்போம் என்று கூறி பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story