நாட்டிய கலை இளமணி விருது பெற்று மாணவி சாதனை


நாட்டிய கலை இளமணி விருது பெற்று மாணவி சாதனை
x
தினத்தந்தி 29 Jun 2019 4:30 AM IST (Updated: 28 Jun 2019 10:54 PM IST)
t-max-icont-min-icon

மண்டபம் யூனியன் வடக்கு வலசை கிராமத்தைச் சேர்ந்த மாணவி நாட்டிய கலை இளமணி விருது பெற்று சாதனைகளை படைத்து கிராமத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

பனைக்குளம்,

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் யூனியன் இரட்டையூரணி ஊராட்சிக்குட்பட்ட வடக்கு வலசை கிராமம் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள் விஜயபாஸ்கரன், ரமணி.

இவர்களுடைய மகள் லேகாஸ்ரீ. தற்போது ராமநாதபுரம் சிவன் கோவில் தெரு பகுதியில் வசித்து வருகின்றனர். மகள் பல்வேறு சாதனை படைக்க லேகாஸ்ரீயின் பெற்றோர் ஊக்கமளித்து வருகின்றனர்.

ராமநாதபுரம் சேதுபதி நடுநிலைப்பள்ளியில் 5-ம் படித்து வரும் லேகாஸ்ரீ 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் கலை பண்பாட்டு கழகம் சார்பாக நடத்தப்பட்ட கலைப்போட்டியில் பரதநாட்டியத்தில் முதலிடம் பெற்றார்.

இதனைத் தொடர்ந்து 2018-ல் தமிழக அரசு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலை இளம்பெண் விருதினையும், மதுரை, தஞ்சை, நெல்லை, ராமநாதபுரம், ராமேசுவரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரதநாட்டியத்தில் பல்வேறு விருதுகளை பெற்று சாதனை படைத்துள்ளார்.

இவர் அரசு கலை பண்பாட்டுத்துறை சார்பில் விருது பெற்று அமைச்சர் பாண்டியராஜனிடம் வாழ்த்து பெற்றுள்ளார்.

இதுபோல் ராமநாதபுரம் தமிழ்ச்சங்கம் நடத்திய நிகழ்ச்சியில் நாட்டிய தாரகை விருதும், காகம் டிரஸ்ட் சார்பில் நாட்டிய கலா மயில் விருதும், முத்தமிழ் மன்றம் சார்பில் நாட்டிய மயில் விருதும், மகளிர் தினத்தில் நடைபெற்ற விழாவில் முத்தால பெண் மகள் விருதும், தஞ்சை கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அபிநய அரசி பட்டம் உள்பட பல்வேறு விருதுகள், பட்டங்கள் பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

இவரை அமைச்சர் டாக்டர் மணிகண்டன், கலெக்டர் வீரராகவராவ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம் பிரகாஷ் மீனா, ராமநாதபுரம் ராஜா குமரன் சேதுபதி மற்றும் ராமநாதபுரத்தில் இயங்கி வரக்கூடிய பல்வேறு அமைப்புக்களை சேர்ந்த நிர்வாகிகளும் மாணவி லேகாஸ்ரீயை பாராட்டி ஊக்கம் அளித்தனர்.

கடந்த 20-ந் தேதி சென்னையில் நடைபெற்ற உலக தமிழிசை விழாவில் கலந்து கொண்டு வீணை கலைஞர் சுதா ரகு நாதனிடம் வாழ்த்து பெற்றுள்ளார்.

இவர் நாட்டிய கலை இளமணி விருது பெற்று மாவட்டத்தில் சிறந்த நாட்டிய இளம் சிறுமியாக சாதனை படைத்துள்ளார்.

ஏழை சிறுமியான இவருக்கு மேலும் ஊக்கமளித்து உதவி வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கைவிடுக்கப்பட்டு உள்ளது.

Next Story