பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் வழங்கினார்


பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் வழங்கினார்
x
தினத்தந்தி 29 Jun 2019 4:30 AM IST (Updated: 28 Jun 2019 10:54 PM IST)
t-max-icont-min-icon

முதுகுளத்தூர் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் வழங்கினார்.

முதுகுளத்தூர்,

முதுகுளத்தூர் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் தலைமையில் ஜமாபந்தி நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர். இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் நிருபர்களிடம் கூறியதாவது:- ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 9 தாலுகாவிலும் வருவாய் தீர்வாய கணக்கு தணிக்கை நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் மொத்தம் 4,325 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. முதுகுளத்தூர் தாலுகாவில் முதியோர் உதவித்தொகை மற்றும் பல்வேறு மாதாந்திர உதவித்தொகை வேண்டி 771 மனுக்களும், பட்டா மாறுதல் வேண்டி 208 மனுக்களும், பட்டா திருத்தம் வேண்டி 31 மனுக்களும், இதர மனுக்களாக 312 மனுக்களும் பெறப்பட்டுள்ளன.

இதில் பெறப்பட்டுள்ள மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளும் விதமாக ஆய்வு செய்யப்பட்டதன் அடிப்படையில் தகுதியான 100-க்கும் மேற்பட்ட மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டுள்ளது.நிறைவு நாளில் 35 பயனாளிகளுக்கு பட்டா திருத்தம், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மீதமுள்ள மனுக்கள் மீது உரிய முறையில் ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான மனுக்கள் மீது அரசு விதிகளுக்குட்பட்டு 30 நாட்களுக்குள் தீர்வு காண சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேபோல தள்ளுபடி செய்யப்படும் மனுக்கள் தொடர்பாக உரிய காரணங்களை எழுத்துப்பூர்வமாக மனுதாரருக்கு பதிலளிக்கவும் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் திருஞானம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை, தாசில்தார்கள் மீனாட்சி, தமீம்ராஜா, சரவணக்குமார் உள்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Next Story