ஏரி, குளங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்


ஏரி, குளங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 28 Jun 2019 9:45 PM GMT (Updated: 28 Jun 2019 5:31 PM GMT)

நீர் நிலைகளை பாதுகாக்க ஏரி, குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

சேலம், 

சேலம் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ரோகிணி தலைமையில் நேற்று நடந்தது. இதில் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டு பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக பேசினர்.

இதைத்தொடர்ந்து மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல் ஏற்பட்டால் அதை எப்படி சமாளிப்பது? அதை கட்டுப்படுத்தி பயிர் மகசூலை அதிகரிப்பது குறித்து சந்தியூர் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீராம் விளக்கி கூறினார்.

இதையடுத்து புளியங்குறிச்சியை சேர்ந்த விவசாயி பெருமாள் பேசுகையில், சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி ஏரி, குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அப்போது தான் நீர் நிலைகளை பாதுகாக்கவும், குடிநீர் பிரச்சினையை தீர்க்கவும் முடியும். அதற்கு மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். புளியங்குறிச்சி பகுதியில் 45 ஏக்கரில் ஓடை புறம்போக்கு நிலம் உள்ளது. இதில் 5 பேருக்கு அதிகாரிகள் பட்டா வழங்கி உள்ளனர். இது எப்படி சாத்தியமானது? என்பது புரியவில்லை. இதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய ஊரக வேலை திட்டத்தில் விவசாயிகளின் பழுதடைந்த கிணறுகளை தூர்வார வேண்டும், என்றார்.

நடுவலூரை சேர்ந்த விவசாயி ஜோதிமணி கூறுகையில், பயிர்களை காப்பீடு செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் கட்டாயப்படுத்துகிறார்கள். ஆனால் 2017-ம் ஆண்டில் செலுத்தப்பட்ட பயிர் காப்பீடு தொகை இதுவரை விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை. சம்பந்தப்பட்ட தனியார் இன்சூரன்ஸ் நிறுவன அதிகாரிகளிடம் கேட்டால், சரியான பதில் தர மறுக்கிறார்கள். சேலம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும், என்றார்.

முன்னாள் எம்.எல்.ஏ., காவிரி பேசுகையில், கோவையில் இருந்து சேலம் வழியாக கர்நாடகாவிற்கு பெட்ரோலிய பொருட்களை எடுத்து செல்ல குழாய் அமைக்கப்பட உள்ளதாகவும், இதற்காக சங்ககிரி, மகுடஞ்சாவடி, கொங்கணாபுரம், தாரமங்கலம், ஓமலூர், மேச்சேரி ஆகிய பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களின் சர்வே எண்ணை குறிப்பிட்டு அந்த நிலங்களை கையகப்படுத்துவதற்காக சுமார் 3 ஆயிரம் பேருக்கு நோட்டீஸ் வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே, அந்த குழாய் அமைக்கும் திட்டத்தை ஆரம்ப நிலையிலேயே தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையென்றால் மிகப்பெரிய போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும், என்றார்.

மேலும், நீர் நிலைகளை பாதுகாக்கவும், குடிநீர் பிரச்சினையை தீர்க்கவும் ஏரி, குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி பேசினர்.

முன்னதாக கலெக்டர் ரோகிணி பேசுகையில், நுண்ணுயிர் சொட்டுநீர் பாசனத்தில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் சாதனை புரிந்துள்ளனர். கடந்த 2018-2019-ம் ஆண்டில் 12 ஆயிரம் ஹெக்ேடர் நுண்ணுயிர் சொட்டுநீர் பாசனம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், 2019-2020-ம் ஆண்டில் 12 ஆயிரத்து 200 ஹெக்ேடர் நுண்ணுயிர் சொட்டு நீர் பாசனம் செய்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை நாம் முழுமையாக செயல்படுத்த விவசாயிகள் முன்வர வேண்டும். மத்திய அரசு மூலம் விவசாயிகளுக்கு 4 மாதத்திற்கு ஒருமுறை ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தில் சேலம் மாவட்டத்தில் இதுவரை ஒரு லட்சத்து 45 ஆயிரம் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேசமயம், விடுபட்டுள்ள சிறு, குறு விவசாயிகள் யாராக இருந்தாலும், அந்தந்த தாலுகா அலுவலகங்களுக்கு சென்று உடனடியாக விண்ணப்பிக்கலாம். இதற்கு கால அவகாசம் ஏதும் இல்லை. விவசாயிகளின் அனைத்து பிரச்சினைகளையும் ஆராய்ந்து அவற்றை நிறைவேற்ற மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கும், என்றார்.

Next Story