தண்ணீருக்காக காத்திருக்கும் குடங்கள்: திருவரங்குளம் ஊராட்சியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு


தண்ணீருக்காக காத்திருக்கும் குடங்கள்: திருவரங்குளம் ஊராட்சியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு
x
தினத்தந்தி 29 Jun 2019 3:45 AM IST (Updated: 29 Jun 2019 12:12 AM IST)
t-max-icont-min-icon

திருவரங்குளம் ஊராட்சியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

திருவரங்குளம், 

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் சராசரி மழையளவு குறைந்து கொண்டே வருகிறது. தற்போது நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக குறைந்து விட்டது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் இல்லை. பல பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. மேலும் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல், ஆர்ப்பாட்டம் உள்பட பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல பகுதிகளில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக திருவரங்குளம் ஊராட்சியில் உள்ள நிம்பனேஸ்வரம், வடக்கு புதூர், திருநகர் ஆகிய பகுதிகளில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. இந்த பகுதியில் 5 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அதிலும் குறைந்த அளவு குடிநீரே பொதுமக்களுக்கு கிடைப்பதால், அவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

இதனால் அவர்கள் இருசக்கர வாகனங்களில் பக்கத்து கிராமத்தில் உள்ள குளங்களுக்கு சென்று, தண்ணீர் எடுத்து வந்து பயன்படுத்தி வரு கின்றனர். நிம்பனேஸ்வரம் பகுதியில் ஒரு மின்மோட்டாருடன் கூடிய சிறிய குடிநீர் தொட்டி உள்ளது. இந்த தொட்டிக்காக அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றில் போதுமான அளவு தண்ணீர் இல்லாததால், குடிநீர் தொட்டியில் 3 நாட்களுக்கு ஒருமுறை தான் தண்ணீர் ஏற்றப்பட்டு வருகிறது. இந்த குடிநீர் தொட்டியில் ஏற்றப்படும் தண்ணீரை பிடிப்பதற்காக அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள், முன்னதாகவே காலிக்குடங்களை கொண்டு தொட்டி அருகே வைக்கின்றனர். இதனால் அங்கு வரிசையாக ஏராளமான குடங்கள் வைக்கப்படுகின்றன. பொதுமக்களுக்கு பதிலாக அந்த குடங்கள் குடிநீருக்காக காத்திருக்கின்றன. பின்னர் அதிகாலை முதல் காத்திருந்து பொதுமக்கள் அந்த தொட்டியில் இருந்து தண்ணீர் பிடித்து செல்கின்றனர்.

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, நிம்பனேஸ்வரம், வடக்கு புதூர், திருநகர் உள்பட ஒன்றியத்தின் பல்வேறு கிராமங்களில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story